#அவன்ற் கார்ட் யுக்ரைன் நாட்டு கெப்டன் விளக்கமறியலில்



குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று கைது செய்யப்பட்ட அவன்ற் கார்ட் கப்பலில் பணியாற்றிய யுக்ரைன் நாட்டு கெப்டனை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது
கடந்த வருடம் ஒ​க்டோபர் மாதம் 13 ஆம் திகதி கடற்படையினால் அவன்ற் கார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன் போது கப்பலில் இருந்து ரீ.56 ரக 549 துப்பாக்கிகளும் எஸ். 84 ரக 264 துப்பாக்கிகளும் 2 இலட்சத்து 4 ஆயிரத்து 674 தோட்டாக்களும் மீட்கப்பட்டன.
பின்னர் கடற்படையினால் குறித்த கப்பல் காலி துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தது.
காலி நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பிலான வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், கெப்டனுக்கு வெளிநாடு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்காமையினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கப்பலின் கப்டன் உள்ளிட்ட 83 பேர் கப்பலில் இருக்கும் போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அவர்களில் சில அதிகாரிகள் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதேவேளை, நேற்று முற்பகல் காலி நீதவான் நீதிமன்றத்தில் இந்த விடயம் தொடர்பிலான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கெப்டனை விடுதலை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையென குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.
எனினும், துப்பாக்கிச் சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் படி கெப்டனுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்துள்ளதாக நேற்று பிற்பகல் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அறிவித்தனர்.
அதன் படி, நேற்று இரவு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சந்தேக நபரான கெப்டன் கைது செய்யப்பட்டதுடன் இன்று முற்பகல் காலி நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 5 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தவிட்டார்.