உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், அதன் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், 250 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்ஃபோன், இன்று முதல் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று ரிங்கிங் பெல்ஸ் என்ற இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது.
நான்கு அமெரிக்க டாலர் அல்லது மூன்று பிரிட்டன் பவுண்டுகளுக்குக் குறைவான விலையுள்ள இந்த ஸ்மார்ட் போன்கள், முதல் கட்டமாக 5 ஆயிரம் பேருக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
''உண்மை நிலவரம் என்னவென்றால், 5 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் இன்று வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மொத்தம் 2 லட்சம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள். என்னைப் பற்றி என்ன சொன்னாலும் பரவாயில்லை. நான் ஓடிப்போய்விட்டதாகச் சொல்கிறார்கள். நான் எங்கும் போகவில்லை. எங்களிடம் சிறிய குழுதான் இருக்கிறது. தகுதியானது என நினைத்தால் எங்கள் கனவை நனவாக்கும் பணியில் ஈடுபட அனுமதியுங்கள்'' என்று பிபிசியிடம் தெரிவித்தார் மோஹித் கோயல்.
அதே நேரத்தில், யாரிடமிருந்தும் முன் பணம் எதுவும் பெறப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த நிறுவனத்தின் அறிவிப்பு மற்றும் நம்பகத்தன்மை தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், மோஹித் கோயல் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

