சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் நான்கு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலை குறித்த விசாரணைகளை மூடி மறைத்தல், சாட்சி விசாரணைகளை மூடி மறைத்தல் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் மூன்று உயர் அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட உள்ளனர்.
கைது செய்யப்பட உள்ளவர்களில் முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் முன்னாள் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
லசந்த கொலை தொடர்பான விசாரணை அறிக்கைகளை மூடி மறைத்தல், இரகசிய தகவல்கள் அடங்கிய லசந்தவின் குறிப்புப் புத்தகத்தை தொலைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இந்த முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.
லசந்த கொலை தொடர்பில் கைதான 17 சந்தேக நபர்களை பொலிஸ் பிணையில் விடுதலை செய்தமை குறித்தும் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த உயர் அதிகாரிகளிடம் ஏற்கனவே புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

