மக்களுக்கு எது தேவையோ அதனை மனதில் இருத்தியே நாம் செயற்பாடுகளை செய்வோம். நீதிபதிகள் என்றாலும் மக்களின் பணத்தில் தான் நாங்களும் வாழ்கின்றோம். என நீதிபதி மா.கணேசராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கல்லடி விமோச்சனா இல்லத்தில் இன்று ''மதுவை வெற்றி கொள்வோம்'' எனும் சமுதாய சீர்திருத்தல் தொடர்பான நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எங்கள் பணியானது, சட்டத்தரணிகளையோ, சக நீதிபதிகளையோ திருப்திப்படுத்துவதற்கானதோ அல்ல. நாம் மக்களின் நலனை கருத்தில் கொண்டே சேவை செய்கின்றோம்.
அந்தவகையில் எமது செயற்பாட்டை தொடர்வதனால் இன்று வடக்கு கிழக்கு முழுவதிலும் இந்த சமுதாயஞ்சார்ந்த சீர்திருத்த பிரிவுவானது பரவி மக்களுக்கு பெருமளவு நன்மைகளை செய்துகொண்டிருக்கின்றது.
சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் பணி மட்டக்களப்பில் சிறந்து விளங்குகின்றது. குறிப்பாக மதுவுக்கு அடிமையானவர்கள் விமோச்சனா இல்லத்துக்கு அனுப்பப்பட்டதன் பின்னர், அவர்கள் குடியை வெறுத்தவர்களாக மாறியிருப்பதனை நான் கண்டுள்ளேன்.
இன்றும் கூட நூற்றுக்கணக்கானோரை சீர்திருத்தத்திற்காக நாங்கள் விமோச்சனா இல்லத்தில் அனுப்பியுள்ளோம்.
சிறுகுற்றம் செய்தவர்களை சிறையிலிடும்போது சில சமயங்களில் அங்குள்ள பெரும் குற்றங்கள் செய்தவர்களுடன் பழகி அவர்களும் பெரும் குற்றங்களை செய்யக் கூடியவர்களாக மாறிவிடலாம்.
இதனால் இவ்வாறான சீர்திருத்த சேவை மக்களுக்கு மிக பயனுள்ளதாக அமையும். எனவும் நீதிபதி மா.கணேசராஜா தெரிவித்திருந்தார்.

