இலங்கையில் அரசாங்க பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் பதவிக்கு தெரிவான மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை பொறுப்புகள் வழங்கப்படவில்லை ஆசிரியர் தொழிற்சங்கங்களினால் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகின்றது.
போட்டிப் பரீட்சை மூலம் தெரிவான தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிக் கூட பொறுப்பை வழங்கக் கோரி குறித்த தலைமை ஆசிரியர்கள் இன்று வெள்ளிக்கிழமை தலைநகர் கொழும்பில் வீதியில் இறங்கி ஆர்பாட்டம் செய்தனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் விகாரமாதேவி பூங்காவிலிருந்து பிரதமர் செயலகம் வரை இந்த ஆர்பாட்ட பேரணி நடைபெற்றது.
அரசாங்க பள்ளி கூடங்களில் நிலவும் தலைமை ஆசிரியர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் 3858 ஆசிரியர்கள் இப் பதவிக்கு தெரிவாகியிருந்தனர்..
இவர்களுக்கு கடந்த மே மாதம் மத்திய கல்வி அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்டு அது தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்ட போதிலும் மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை பள்ளிக் கூட பொறுப்புகள் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் கூறுகின்றது.
கல்வி அமைச்சின் கவனத்திற்கு பல தடவைகள் இந்த விடயத்தை முன் வைத்தும் தொடரும் இழுபறி காரணமாகவே இன்றைய போராட்டதின் மூலம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்கின்றார் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின்.
தலைமை ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகளில் சிரேஷ்ட ஆசிரியர்களே தற்போது ( பதில் ) கடமையாற்றி வரும் நிலையில் தங்களுக்கு நிரந்தர நியமனம் கோரி அவர்களும் போராடுகின்றார்கள்.
இதன் காரணமாகவே கல்வி அமைச்சு பள்ளிக் கூட பொறுப்பகளை வழங்குதல் தொடர்பில் கல்வி அமைச்சு நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வதாக கூறப்படுகின்றது
இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்பாட்ட பேரணி முடிவில் பிரதமரின் செயலாளார் சமன் ஏக்கநாயக்காவை பிரதம மந்திரிக்கு முகவரியிடப்பட்ட கோரிக்கை மனுவொன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கையளிக்கப்பட்டது.
பதில் தலைமை ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல் , அரசியல் பழிவாங்கல் என்ற போர்வையில் ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் நியமனம் வழங்குதல் போன்ற முன்னெடுப்புகள் கைவிடப்பட வேண்டும் என்று இந்த சந்திப்பில் தாங்கள் பிரதமரின் செயலாளரிடம் கேட்டுக் கொண்டதாக ஜோசப் ஸ்டாலின் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார்.
இந்த விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு விரைவில் தீர்வு பெற்றுத் தரப்படும் என பிரதமரின் செயலாளர் தங்களுக்கு பதில் அளித்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்

