#மரிக்கார் ராமதாஸ் மறைந்தார்





இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர் மரிக்கார் ராம்தாஸ், இந்தியாவில் காலமானார்.
1976 இல வெளிவந்த, கோமாளிகள் திரைப்படத்துக்கு திரைக் கதை எழுதி அதில் நடித்தும் மிளிர்ந்தவர். எண்ணற்ற வானொலி நாடகங்களில், தனது நடிப்பு முத்திரையினை வெளிக் கொண்டுவந்திருந்தார்.

தொடர் நாடகங்களால் தமிழ்ப்பேசும் நெஞ்சங்களைத் தொட்டவர். ஞாயிறு மாலைகளில் இலங்கை வானொலியின் தீஞ்சுவைப் படையல்களுக்காக செவி வாய்கள் அகலமாய் திறக்கப்பட்ட அற்புத நாட்கள் அவை.

இறக்குமதிகளின் ஆதிக்கமில்லாத அந்த காலத்தில் ஒலி- ஒளி ஊடகத்தை உருப்படியாய் பயன்படுத்தியவர்களில் மரிக்கார் ராம்தாஸ் குறிப்பிடத்தக்கவர்.

அம்பிகா - உதயா நகையகங்களின் அனுசரணையில் உள்ளூர்க் கலைஞர்களுக்கு நம்பிக்கையும், உற்சாகமும் தரும் ‘பாட்டுக்குப் பாட்டு’ ‘தேனிசை மாலை’ நிகழ்ச்சிகளை பல ஆண்டுகள் ஒருங்கிணைப்பில்  நடத்திய புகழ் மாலைக்குரியவர்.

கொழும்பில் ஒலிப்பதிவு கூடங்கள் மிக அரிதான 1980களில் தமிழ் கலைஞர்களுக்காக தன் மனையில் கலையகக் களம் அமைத்துக் கொடுத்தவர் ராம்தாஸ் என்றால் மிகையாகாது.

எஸ். பி. பி. டி. எம். எஸ். சுசிலா என இந்திய பிரபலங்களை இலங்கைக்கு அழைத்து வந்து வெற்றி நிகழ்ச்சிகளை பலதை பந்தி வைத்தவர்.

ஈழத்துத் திரைப்படத்துறையில் தனித்துவ முத்திரை குத்திய ராம்தாஸ் தீட்டப்பட்ட கத்திகளுக்கு மத்தியிலும் சித்திபெற்ற தீரக் கலைஞராவார்.

“மரைக்கார்” என்ற முஸ்லிம் கதாபாத்திரத்துடன் இரண்டறக்கலந்த ராம்தாஸ்.

கொழும்பு  வாழ்      முஸ்லிம்களின் பேச்சுத் தமிழை கொச்சைப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தபோதும், இன்றுவரை மரைக்காரை முஸ்லிம் ரசிகர்கள் மறக்கவில்லை.

கலைக்கு மதங்கள் தடையாகாது என்பதையும் நிருபித்தவர்.

எமது நாட்டின் அற்புதமான, உயர்ந்த கலைஞர் மரிக்கார் S.ராம்தாஸ் அவர்களின் பிரிவு எம் கலையுலகத்திற்கு மாபெரும் இழப்பாகும். அவரின் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திப்போம்