# இந்திய மீனவர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு



கொழும்பு: 

இந்தியா உடனான மீனவர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை  தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்ற பிரதான எதிர்க்கட்சி கொறடா கேள்விக்கு பதில் அளித்த ரணில் இவ்வாறு கூறினார். ஆயிரத்துக்கம் மேற்பட்ட  படகுகளில் இந்திய மீனவர்கள் இலங்கை எல்லையில் மீன்பிடித்து வருகின்றனர். மீன்வளத்துக்கு அச்சுறுத்தலான இரட்டை மடி வலையை இந்திய மீனவர்கள் பயன்படுத்துவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் மீனவர் பிரச்சனைக்கு தீர்வுக்காண பல்வேறு செயல்திட்டங்கள்  வரப்பெற்றுள்ளதாகவும் ரணில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக கச்சத்தீவு அருகே நேற்று நள்ளிரவில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர், 3  படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள்  கடலுக்கு சென்றனர். இதில் ஒரு பகுதியினர் கச்சத்தீவின் வடக்கு கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு மீன் பிடித்து கொண்டிருந்தனர். அங்கு 2 கப்பல்களில்  ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்கியதுடன், படகில் இருந்த மீன்பிடி வலைகளையும் வெட்டி கடலில் வீசினர். மேலும்  தங்கச்சிமடத்தை சேர்ந்த கெவின், எமர்சன் ஆகியோரின் படகு உட்பட 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்ததுடன், 16 மீனவர்களை சிறைபிடித்து  காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். 

அவர்களிடம் இலங்கை கடற்படை உயர்அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனிடையே இலங்கை கடற்படையினரின்  நடவடிக்கைக்கு பயந்து வேறு பகுதிகளுக்கு சென்ற மீனவர்கள் குறைந்த அளவு மீன்பாடுடன் இன்று அதிகாலை கரை திரும்பினர். இலங்கை  கடற்படையினரின் தாக்குதல், சிறைப்பிடிப்பு நடவடிக்கையால் ராமேஸ்வரத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 30ம் தேதி முதல்  பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினத்தை சேர்ந்த 57 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது  செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மேலும் 16 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது. சிறை பிடிக்கப்பட்ட 16 மீனவர்களும் கடற்படை அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர் யாழ்ப்பாணம் கடல்தொழில் மற்றும் நீரியில்  வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்று மாலைக்குள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இவ்வாறு மீனவர்கள்  தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு விரைவில்  தீர்வு காணப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.