இவ்வருடம் புனித ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் நோக்குடன் சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் சைக்கிளில் 8150 கிலோ மீற்றர் தூரம் பயணித்து சவூதி அரேபியாவை வந்தடைந்துள்ளார்.
முஹம்மத் எனும் பெயருடைய குறித்த நபர் சீனாவின் சின்ஜியாங் மாநிலத்திலுள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்டு சுமார் இரண்டு மாத காலம் இதற்காக தொடராக சைக்கிளில் பயணித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் தாயிப் நகரை வந்தடைந்த இவரை அங்குள்ள உள்ளூர் சைக்கிள் ஓட்ட குழுவினர் வரவேற்று மக்காவின் ஏனைய பகுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சீனாவிலிருந்து இம் முறை 14500 பேர் புனித ஹஜ் யாத்திரைக்காக சவூதிக்கு பயணிக்கின்றனர். இவர்களில் ஏலவே 11000 பேர் 37 விமானங்கள் மூலமாக சவூதியை வந்தடைந்துள்ளனர்.
எனினும் இவர்களில் முஹம்மத் மாத்திரமே சைக்கிள் மூலமாக மிகவும் கடினமானதொரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். இவர் ஏன் இவ்வாறானதொரு பயண வழியை தேர்ந்தெடுத்தார் என்பதற்காக காரணங்கள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
2007 ஆம் ஆண்டு 63 வயதான செச்னிய நபர் ஒருவர் 12 ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் சைக்கிளில் பயணித்து ஹஜ் கடமையை நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

