இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், பிரபல துடுப்பாட்ட வீரருமான திலகரத்ன தில்ஷான் சர்வதேச போட்டிகளிலிருந்து ஒய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ள தில்சான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தம்புள்ளையில் நடைபெறவுள்ள முன்றாவது ஒருநாள் போட்டிக்கு பிறகு, தான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அதே போன்று செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறவுள்ள 20-20 ஓவர்கள் போட்டிகளுக்கு பின்னர், தான் இருபது 20-20 ஓவர்கள் போட்டிகளில் இருந்து ஒய்வுபெறப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதத்தில் ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்த தில்ஷான் தனது விளையாட்டு திறமையில் எவ்விதமான பின்னடைவுகளும் ஏற்படாத காரணத்தினால், தனது ஒய்வு குறித்து தொடர்பாக எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அறிவித்திருந்தார்.
இப்பின்னணியில், 39 வயதான திலகரத்ன தில்ஷான் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறும் முடிவினை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது வரை 87 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள தில்ஷான், 5,492 ஓட்டங்களையும், 39 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். மேலும், தான் விளையாடிய 329 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில், 10,248 ஓட்டங்களையும், 106 விக்கெட்டுகளையும் அவர் பெற்றுள்ளார். மொத்தம் 78, 20-20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள தில்ஷான், 1,884 ஓட்டங்களையும், 7 விக்கெட்டுகளையும் பெற்றுள்ளார்.

