தடையை நீக்க கோரி சத்தியாகிரகப் போராட்டம்





இலங்கையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் மீதான வகுப்புத் தடையை நீக்கக் கோரி சக மாணவர்கள் இன்று வியாழக்கிழமை சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வளாகத்தின் நிர்வாக கட்டடத் தொகுதிக்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தில் சிங்கள மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறியது , நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது போன்ற காரணங்களுக்காக வர்த்தகம் மற்றும் விஞ்ஞானப் பீடங்களை சேர்ந்த 28 சிங்கள மாணவர்களுக்கு எதிராக 3 முதல் 6 மாதங்கள் வரை இந்த வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வகுப்பு தடை அநீதியானது என கூறி சிங்கள மாணவர்களின் மீதான தடையை நீக்க கோரி கடந்த ஒரு வாரக் காலமாக நடத்தி வரும் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இன்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின் எதிர்காலம் கருதி நிர்வாகத்துடன் பேசியும் தீர்வு கிடைக்கவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த மாணவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வகுப்பு தடை இன்னும் இரு மாதங்களில் நீக்கப்பட்டு விடும் என பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகின்றது.
நிர்வாகம் இப்படிக் கூறினாலும் மாணவர்கள் மீதான வகுப்பு தடை நீக்கப்படும் வரை தங்கள் போராட்டமும் தொடரும் என சிங்கள மாணவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.