உள் நாட்டு போரில் காணாமல் போனோர் குறித்த நினைவு கூரல்



அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய இன்று (செவ்வாய்க்கிழமை), இலங்கையில், உள் நாட்டு போரில் காணாமல் போனவர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்திலும் நடைபெற்றன.
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்புகளினாலும், சிவில் அமைப்புகளினாலும் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


மட்டக்களப்பு நகரில் மகாத்மா காந்தி பூங்காவிலும், திருகோணமலை நகரில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு அருகாமையிலும், இந்நிகழ்வுகள் நடைபெற்றன.இந்நிகழ்வுகளில் குறிப்பாக போர் காலத்தில் கடத்தப்பட்டும் வேறு சந்தர்ப்பங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை அவர்களின் உறவுகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் ஒன்று கூடி நினைவு கூர்ந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உண்மை நிலையை கண்டறிய சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலான பதாகைகளையும், வாசக அட்டைகளையும் ஏந்தியவாறு அங்கு காணப்பட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடிக் கண்டறிவதற்கு பதிலாக அரசாங்கம் தங்களுக்கு மரண சான்றிதழ் தர முற்படுவதாக, இதில் கலந்து கொண்ட உறவுகளினால் கவலை வெளியிட்டது.
இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பாக அவர்களில் பலரும் அது தொடர்பாக நம்பிக்கையிழந்தவர்களாக தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
இதனிடையே, தலைநகர் கொழும்புக்கு வெளியே களனியிலும் இது தொடர்பான நிகழ்வொன்று காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி கண்டறியும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வடக்கு - கிழக்கு உள்பட நாட்டின் பலபகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பெரும் எண்ணிக்கையிலானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.