#கல்முனை:பஸ் தரிப்பிடமின்மையால் வந்த முறுகல்



கல்முனை தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்களுக்கும் இடையில் இன்று முறுகல் நிலை ஏற்பட்டது.
தமது பஸ்களை நிறுத்துவதற்கு இடம் வழங்குமாறு கோரி, இலங்கை போக்குவரத்து அதிகார சபையின் பஸ் தரிப்பிடத்திற்குள் தனியார் பேருந்து ஊழியர்கள் இன்று காலை பிரவேசிக்க முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
நீண்ட காலமாக நிரந்தர பஸ் தரிப்பிடம் இன்றி அல்லலுறுவதுடன், தமக்காக ஒதுக்கப்பட்ட காணி தனியார் வங்கி ஒன்றிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் ஊழியர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த முறுகல் நிலையை அடுத்து காலை 6.30 மணியளவில் இரு தரப்பினரும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
பின்னர், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையைக் கருத்திற்கொண்டு பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ரியாஸ் அலிகானிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்களின் பிரச்சினை குறித்து தாம் அவதானம் செலுத்தியுள்ளதாகக் கூறினார்.
இதேவேளை, பஸ் தரிப்பிடம் இல்லாதமையினால் கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியிலும் கல்முனை நூலகத்திற்கு முன்பாகவும் தனியார் பஸ்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.