அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவின் வருகைக்கு மாணவர்கள் எதிர்ப்பு



இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியான நிலையில் இருப்பதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல கூறியிருக்கிறார்.
"வெளிநாட்டு முதலீடுகள் மூலமே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்'' என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்
கிழக்கு மாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தனது அமைச்சு சார்ந்த நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, "வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வர வேண்டும் என நாம் விரும்புகின்றோம். இது தொடர்பாக ராஜதந்திரிகளுடன் பேசி வருகின்றோம். இலங்கையில் முதலீடு பெருக வேண்டுமானால் சட்டப்படியான ஆட்சி நடைபெற வேண்டும் என அவர்கள் வற்புறுத்துகின்றார்கள்.இது எதார்த்தமானது. 19-வது அரசியல் யாப்பு திருத்தம் வழியாக அனைத்து துறைகளும் சுதந்திரமாக இயங்கக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது '' என்று தனது உரையில் குறிப்பிட்டார்.காணாமல் போனோர் அலுவலகம்

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பாகவும் தனது உரையில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக் காட்டியிருந்தார்
“இலங்கையில் மாணவர்கள் உட்பட ஆட்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்படுவதற்கு சட்டத்தின் ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கூச்சல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.

"இந்த சட்டத்தின் நோக்கம் குற்றவாளி யார் என்பதை கண்டறிவது அல்ல. காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்ததது என்பதை அவர்களின் உறவுகளும் நண்பர்களும் கண்டறியும் உரிமை கிடைத்துள்ளது" என்றும் அவர் கூறினார்.
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல தெற்கில் 1971 மற்றும் 1989 ஆம் ஆண்டு கிளர்ச்சிகளின் போது ஆட்கள் காணாமல் போனமை தொடர்பாகவும் உயர்கல்வி துறை அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அமைச்சர் வருகைக்கு மாணவர்கள் எதிர்ப்பு



இதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர் விடுதி, மட்டக்களப்பில் மருத்துவ துறை மாணவர் விடுதி ஆகியவை அமைச்சரால் இந்த விஜயத்தின் போது திறந்து வைக்கப்பட்டன.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமுலை வளாக மாணவர் விடுதி திறப்பு விழாவுக்கு அமைச்சரின் வருகைக்கு மாணவர்கள் காட்டிய எதிர்ப்பு காரணமாக இறுதி நேரத்தில் அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இன்று சனிக்கிழமை தென் கிழக்கு பல்கலைக்கழகத்திலும் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல கலந்து கொள்ளும் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
மாணவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் அமர்ந்து நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக இறுதி நேரத்தில் அந்த விஜயமும் ரத்து செய்யப்பட்டது.