சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனம் இயங்கி வரும் பத்தரமுல்லை- டென்சில் கெப்பேகடுவ மாவத்தையில் உள்ள 6 மாடிக் கட்டடத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை கையகப்படுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபைக் கூடத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிறுவனம் இயங்கும் டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள 30 பேச்சர்ஸ் காணி 2003 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைக்காக காணியின் பெறுமதியில் 0.25 வீதத்தை செலுத்தும் அடிப்படையில், நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் கல்வி நடவடிக்கைக்கு பயன்படுத்தாமல், 2006 ஆம் ஆண்டு முதல் வர்த்தக நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக பணிப்பாளர்கள் சபைக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில், காணிக்காக சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனம் காணியின் பெறுமதியில் 4 வீதத்தை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு செலுத்த வேண்டும் என்ற போதிலும் இதுவரை அந்த பணம் செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவுக்கு சொந்தமானது
இந்த தொலைக்காட்சியின் வங்கிக்கணக்கில் இருந்த 157 மில்லியன் ரூபா பணம் மற்றும் வெளிபுற நேரடி ஒளிப்பரப்பு பஸ் என்பன நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இதற்கு முன்னர் அரசுடமையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

