புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பொலிஸாருக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.
இதன்படி வீதிக்கு குறுக்காக டயர்களை போட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பினை வௌியிட்டு வருகின்றனர்.
புஸ்ஸல்லாவ - ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் என்ற 28 வயது இளைஞன், குற்றச்செயல் ஒன்றின் காரணமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி நேற்று இரவு 07.30 அளவில் புஸ்ஸல்லாவ - பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்தும் வரை புஸ்ஸல்லாவ பொலிஸ் பாதுகாப்பில் வைத்திருந்தனர்.
இந்தநிலையில், சந்தேகநபர் தனது ரீசேட்டை பயன்படுத்தி பொலிஸ் நிலையத்தில் வைத்து தூக்கில் தொங்கியுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை, செல்லும் வழியில் ரவிசந்திரன் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்த நபரின் உறவினர்கள் பொலிஸாரே இதற்குக் காரணம் என குற்றம்சுமத்தியுள்ளனர்.
அவரது உறவினர் ஒருவர் கூறுகையில், முச்சக்கர வண்டியில் வந்த பொலிஸார் ரவிசந்திரனை அழைத்துச் சென்றதாகவும், பொலிஸ் நிலையத்தில் வைத்து அவரை தன் கண்முன்னே தாக்கியதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் ரவிச்சந்திரன் அவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்பவர் அல்ல என குறிப்பிட்ட அவர், இதற்கு பொலிஸாரே காரணம் எனவும் தெரிவித்திருந்தார்.
இதன்படி இன்று பொலிஸாருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறு இருக்க கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேகநபரை உரிய முறையில் கண்காணிக்கத் தவறியமைக்காகவே, சம்பவம் இடம்பெற்ற போது கடமையில் இருந்த இரு பொலிஸார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

