புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இரு பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேகநபரை உரிய முறையில் கண்காணிக்கத் தவறியமைக்காகவே, சம்பவம் இடம்பெற்ற போது கடமையில் இருந்த இரு பொலிஸாருக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புஸ்ஸல்லாவ - ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் என்ற 28 வயது இளைஞன் பொலிஸ் நிலையத்தில் வைத்து தூக்கில் தொங்கிய நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும் செல்லும் வழியில் அவர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்தநபர் குற்றச்செயல் ஒன்றின் காரணமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி நேற்று இரவு 07.30 அளவில் புஸ்ஸல்லாவ - பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்தும் வரை புஸ்ஸல்லாவ பொலிஸ் பாதுகாப்பில் வைத்திருந்தனர்.
இந்தநிலையில், சந்தேகநபர் தனது ரீசேட்டை பயன்படுத்தி தூக்கில் தொங்கியுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை உயிரிழந்த நபரின் சடலம் தற்போது புஸ்ஸல்லாவ - வகுகம்பிடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

