பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் காணாமற்போயிருந்த ஹம்பாந்தோட்டை இளைஞனை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் மஞ்ஜுல கருணாரத்ன உத்தரவிட்டார்.
கடந்த 5ஆம் திகதி காணாமற்போனதாகக் கூறப்படும் மேற்படி இளைஞன், மாத்தறை, திக்வெல்ல பிரதேசத்திலுள்ள விகாரையொன்றிலிருந்து, நேற்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டார். பொலிஸ் காவலில் இருந்தபோது, அவ்விளைஞன் தப்பிச் சென்றதாகவே, முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று மாலை, உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞனிடம், நேற்றிரவு 8. மணியிலிருந்மு இன்று வௌ்ளிக்கிழமை அதிகாலை 2 மணிவரை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட நீதவானின் வாசஸ்தலத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, அவ்விளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.
நெல் மூடைகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில், ஹம்பாந்தோட்டை - பந்தகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி இளைஞன் உட்பட மூன்று பேரை, ஹம்பாந்தோட்டை பொலிஸார், கடந்த 5ஆம் திகதியன்று கைது செய்திருந்தனர். இந்நிலையில், குறித்த இளைஞன் காணாமற்போயிருந்தார்.
பொலிஸாரின் கவனயீனம் காரணமாகவே அவ்விளைஞன் காணாமற்போயிருந்தார் என்ற குற்றச்சாட்டில், அப்பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நால்வர், பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

