(சட்டத்தரணி- குருபரன் குமாரவடிவேல்)
ஆட்சியாளர்களோடு நெருக்கமாகவுள்ள அரசியலமைப்பு சட்ட நிபுணர்கள், வெளிநாட்டு இராசதந்திரிகள் ஆகியோருடைய கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போது 1) தற்போதைய அரசியலமைப்பின் ஒற்றையாட்சி உறுப்புரையும் (உறுப்புரை 2) 2) பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கும் உறுப்புரிமையும் (உறுப்புரிமை 9) ஏதோவொரு வடிவில் புதிய அரசியலமைப்பிலும் இடம் பெறும் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகின்றது. இவ் உறுப்புரைகளின் தாக்கத்தை குறைப்பதற்கான (watering down/ dilution) முயற்சிகள் மாத்திரமே இன்று சாத்தியம் என்று தென்னிலங்கையின் 'முற்போக்கு' 'லிபரல்' சிவில் சமூகம் கூறுகின்றது.
எனவே தான் சமஷ்டிக் கோரிக்கையாளர்களும் மதச்சார்பற்ற நாட்டைக் கோருவோரும் ஏதோவொரு விதத்தில் தீவிரவாதிகளாக / குழப்பவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். கூட்டமைப்பின் தலைமைக்கு இவ்விடயத்தில் விலக்களிப்பு உண்டு. கோரிக்கை என்றளவில் இவ்விடயங்களோடு அவர்கள் நின்றாலும் யதார்த்தத்தை இறுதியில் ஏற்றுக் கொள்வார்கள் என்ற அடிப்படையில்/ நம்பிக்கையில் அவர்களுக்கு இந்த விலக்களிப்பு வழங்கப்படுகின்றது. இந்த நம்பிக்கையில் தான் ரணில் முந்தி விழுந்து கூட்டமைப்பும் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்க ஆதரவு என்று உளரித் தள்ளி விட்டார். சுமந்திரன் பா. உ. மிகக் கவனமாக இதற்கு பதில் அளித்துள்ளார். அரசியலமைப்பாக்க சபையின் வழிகாட்டல் குழுவில் இவ்விடயம் இது வரை பேசப்படவில்லை என்றும் மதச் சார்பற்ற நாடு என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் கூறியுள்ளார். நிலைப்பாடு சமஷ்டியும் மதச் சார்பற்ற நாடும் தான். ஆனால் கூட்டமைப்பை பொறுத்த வரை இவை பேச்சுவார்த்தையில் விட்டுக் கொடுக்க முடியாத அடிப்படைகளா என்பது தான் கேள்வி. பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளை எல்லா மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று உறுத்தியளிக்கப்படும் என கூறப்பட்டால் பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை ஏற்றுக் கொள்ளலாம் என கூட்டமைப்பின் தலைமைக்கு ஆதரவளிக்கும் இந்த தென்னிலங்கையின் லிபரல் சிவில் சமூகம் கூறுகின்றது. அதே போன்று வரைவிலக்கணத்தினால் வலுக் குறைப்பு செய்யப்பட்ட ஒற்றையாட்சி உறுப்புரையை 13ஆம் திருத்தத்திலும் பார்க்க சற்றுக் கூடிய அதிகாரப் பகிர்வுடன் ஏற்றுக் கொள்ளலாம் என இந்த தென்னிலங்கை முற்போக்கு யதார்த்தவாதிகள் கூறுகின்றனர். 13க்கு மேல் சாத்தியமில்லை என ரணில் அடிக்கடி கூறுகின்றார். ஆனால் தமிழரசுக் கட்சித் தலைவரை மேற்கோள் காட்டி சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வுக்கு 13க்கு மேற்பட்ட அதிகாரப் பகிர்வுக்கு ரணில் கரிசனையோடு உள்ளார் என இன்று செய்தி வந்துள்ளது. நிற்க.
பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிப்போம் ஆனால் எல்லா மாதங்களுக்கும் சம உரிமை உண்டு என்பது தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகளில் இருந்து வித்தியாசமான ஒன்று அல்ல. ஒற்றையாட்சிக்குள் என்ன தான் முக்கினாலும் அதிகாரப் பகிரவும் வரும் ஆனால் வராது என்பதும் நாம் அறிந்ததே. வலுக்குறைந்த ஒற்றையாட்சி முறைமை என்பது ஒரு மாயை மட்டுமே. மொத்தத்தில் புது முட்டியில் பழைய கள்ளு தான் வரும் போல உள்ளது. ஆனால் படகைக் கவிழ்க்காமல் பொறுத்திருந்து திரைமறைவில் நல்லது நடக்கும் என நாம் எதிர்பார்த்து காத்திருப்பது காலத்தின் தேவை.
இந்த புதிய முட்டி தான் முற்போக்காளர்கள் பரித்துரைப்பவை என்றால் சிங்கள பௌத்த தேசியவாதிகள் இவர்களது குறைந்த பட்ச நிலைப்பாடுகளுக்கு கூட எதிர்வினை ஆற்றுவார்கள் என்பதனை நான் சொல்லி அறிய வேண்டியதில்லை. தேர்தல் முறை மறுசீரமைப்பில் அநியாயம் நடக்கின்றது என மனோ கணேசனும் ஹக்கீமும் சொல்வதை வைத்து பார்த்தால் புது முட்டியில் படு மோசனான சாராயம் தான் இருக்குமோ தெரியாது. பொறுமை காப்போம். நல்லது நடக்கும்.

