விறுவிறுப்பான போட்டியில் இந்திய தோல்வி



நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி, டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி ‘பவுலிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
வில்லியம்சன் சதம்
நியூசிலாந்து அணிக்கு கப்டில், டாம் லதாம் ஜோடி துவக்கம் தந்தது. உமேஷ் வீசிய இரண்டாவது பந்தில் கப்டில் டக்–அவுட்டானார். பின் இணைந்த லதாம், கேப்டன் வில்லியம்சன் ஜோடி சிறப்பாக செயல்பட்டது. லதாம் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அமித் மிஸ்ரா ‘சுழலில்’ ராஸ் டெய்லர் (21) சிக்கினார். பாண்ட்யா, மிஸ்ரா பந்துகளில் பவுண்டரி அடித்த வில்லியம்சன் 8வது ஒரு நாள் சதம் விளாசினார். மீண்டும் வந்த மிஸ்ரா, இம்முறை கோரி ஆண்டர்சன் (21), வில்லியம்சனை (118) வெளியேற்றினார். ரான்கி 6 ரன்களில் அவுட்டானார். பும்ரா ‘வேகத்தில்’ டெவ்ரிச் (7), சவுத்தீ (0) சிக்கினர். முடிவில், நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தது. சான்ட்னர் (9) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக மிஸ்ரா, பும்ரா தலா 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் (15) அதிர்ச்சி தந்தார். சான்ட்னர் ‘சுழலில்’ கோஹ்லி (9) சிக்கினார். ரகானே 28 ரன்கள் எடுத்தார். மணிஷ் பாண்டே (19) ரன்–அவுட்டானார். கேப்டன் தோனி (39), கேதர் ஜாதவ் (41) ஓரளவு ஆறுதல் தந்தனர். அக்சர் படேல் (17) நிலைக்கவில்லை. அமித் மிஸ்ரா (1) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய பாண்ட்யா (36) நம்பிக்கை தந்தார். கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன. சவுத்தீ வீசிய 50வது ஓவரின் 3வது பந்தில் பும்ரா (0) போல்டானார்.
இந்திய அணி 50 ஓவரில் 236 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வி அடைந்தது. உமேஷ் யாதவ் (18) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் சவுத்தீ 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1–1 என சமநிலை அடைந்தது. மூன்றாவது போட்டி வரும் 23ல் மொகாலியில் நடக்கவுள்ளது.