கிழக்கு மாகாண ஆசிரியர்களை வெளி மாகாண பாடசாலைகளில் நியமித்த சர்ச்சைக்கு முடிவு



இலங்கையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளிலிருந்து படித்து முடித்து வெளியேறிய கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு வெளி மாகாண பாடசாலைகளில் நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பாக எழுந்த சர்ச்சை இன்று திங்கட்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இதனையடுத்து அனைத்து ஆசிரியர்களும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் பெறவிருப்பதாக மாகாண முதலமைச்சர் செயலகம் கூறுகின்றது.
மத்திய கல்வி அமைச்சுக்கு இன்று திங்கட்கிழமை நேரடியாக சென்றிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் கல்வி அமைச்சு செயலாளரை சந்தித்து கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற முடிந்ததாக முதலமைச்சர் செயலகம் தெரிவிக்கின்றது



மாகாண முதலமைச்சர் சென்றிருந்த வேளை கல்விச் செயலாளர் அங்கு இல்லாத நிலையில் '' இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை வெளியேற போவதில்லை '' என கூறி அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட உரிய அதிகாரிகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.