நீதிமன்றங்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுப்பதற்காகவோ, சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு விரல் நீட்டுவதற்காகவோ தாம் ஜனாதிபதியாகவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கடற்படையின் முன்னாள் தளபதிகள் மூவரை நீதிமன்றத்திற்கு அனுப்பியமை தொடர்பில் ஜனாதிபதி தமது அதிருப்தியை வெளியிட்டார்.
மேலும், கடற்படையின் தளபதிகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்றால், இதன் மூலம் அரசியல் இலாபம் பெறுவதற்கு சிலர் காத்திருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழு ஊடாக முன்வைக்கப்படும் பிரேரணைகளை எதிர்கொள்ள முடியாத நிலைமை கடந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டதாகவும் மக்கள் மத்தியில் அந்த அரசாங்கம் நம்பிக்கையிழந்திருந்ததாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதுபற்றி விவாதிக்க வேண்டுமானால் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
சேவையில் ஈடுபட்டுள்ள, ஓய்வுபெற்ற மற்றும் அங்கவீனமடைந்த முப்படை வீரர்களுக்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உறுப்பினர்களுக்கும் வீடு மற்றும் காணிகளை வழங்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெற்றது.

