இங்கிலாந்தின் பிரதமர் தெரஸா மேவிற்கு பெங்களூருவில் சிறப்பான வரவேற்பு



பெங்களூரு: 

இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்றுள்ள தெரசா மே தனது முதல் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த இந்தியா, இங்கிலாந்து தொழில்நுட்ப மாநாட்டை தெரசா மே தொடங்கி வைத்தார். இதனையடுத்து பிரதமர் மோடியையும் சந்தித்து பேசினார். இதனையடுத்து இன்று காலை 11 மணியளவில் பெங்களூரு வந்த வந்த பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே-வை கர்நாடக முதல்வர் சித்தராமையா வரவேற்றார். 

இது தொடர்பாக பெங்களூர் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘இங்கிலாந்து  பிரதமர் தெரசா மே பெங்களூருவில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை  சந்தித்து பேசுகிறார். பின்னர் பீன்யாவில் சில  நிகழ்ச்சியில்  கலந்துகொள்ளும் அவர், அல்சூருவிலுள்ள பழமை வாய்ந்த சோமேஸ்வரன் கோயிலுக்கு  சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர்  பல்வேறு நிகழ்ச்சி கலந்து கொண்டு, லண்டனுக்கு திரும்புகிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லியில் நேற்று தெரஸா மே துவக்கிவைத்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். இதில் பொருளாதார சவால்களை சந்தித்து வரும் உலக சூழலில், பாதுகாப்பு, உற்பத்தி, விண்வெளி துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம், இந்தியாவும், இங்கிலாந்தும் தனது தொழில்நுட்ப ஆற்றலினால் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும்’’ என பிரதமர் மோடி பேசினார். இம்மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:

வர்த்தகம், பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கக் கூடிய உலக பொருளாதாரத்தின் தற்போதைய சூழலில் இந்தியாவும், இங்கிலாந்தும் எண்ணற்ற சவால்களை சந்தித்துக் கொண்டுள்ளன. இந்த நேரத்தில், இந்தியாவும், இங்கிலாந்தும் இணைந்து, தொழில்நுட்ப உதவியின் மூலம் வெற்றிகரமான, துடிப்பான புதிய பொருளாதார சூழலை உருவாக்க முடியும். நம் இரு நாடுகளும் இணைந்து அறிவியல் பலத்தின் மூலமும், தொழில்நுட்ப ஆற்றலின் மூலமும் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என நம்பிக்கையுடன் உள்ளேன்.

பொருளாதாரத்தில் இந்தியா வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி, ஸ்டார்ட் அப், டிஜிட்டல் பொருளாதாரம் என அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இவை, இந்தியா, இங்கிலாந்து இடையேயான வர்த்தக உறவை நிச்சயம் விரிவுபடுத்தும். இதில் முக்கிய விஷயமாக கருதுவது மேக் இன் இந்தியா திட்டத்தை தான். பாதுகாப்பு, உற்பத்தி, விண்வெளி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை தளர்த்தியதன் மூலம் இங்கிலாந்துதான் அதிக பலன்களை பெறும் நாடாக இருக்கிறது.

கடந்த 5 ஆண்டாக இருதரப்பு வர்த்தம் ஒரே அளவிலேயே உள்ளது. இங்கிலாந்தில் முதலீடு செய்யும் நாடுகளில் 3வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்யும் ஜி20 நாடுகளில் முதலிடத்தில் இங்கிலாந்து உள்ளது. இதன் மூலம் இரு நாடுகளும் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. இந்த வர்த்தக உறவு எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பங்கேற்க இங்கிலாந்து நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

இதே போல, இளம் தலைமுறையினருக்கு கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை வழங்குவதை இரு நாடுகளும் ஊக்குவிக்க வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் ஆகியவை வளர்ச்சிக்கு அவசியமானவை. அவை இரு தரப்பு உறவில் முக்கிய பங்காற்றுகிறது. அறிவியல் உலகளாவியதாக இருக்கலாம். ஆனால், தொழில்நுட்பமானது உள்ளூர் திறனாக இருக்க வேண்டும். 

எனவே, இது போன்ற மாநாடுகள் இரு நாடுகளின் தேவையை அடையாளம் கண்டு, அதன் மூலம் உறவை வலுப்படுத்த உதவும். இவ்வாறு மோடி பேசினார்.பின்னர், பிரதமர் மோடி மத்திய ஊழல்தடுப்பு ஆணையத்தின் விழிப்புணர்வு வார விழாவில் பங்கேற்று பேசுகையில், ‘இந்தியா போன்ற நாடுகளில் ஊழலை தடுக்க ஆதார் போன்ற தகவல் தொழில்நுட்ப வசதிகள் அவசியம்’ என்றார்.