ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பினார்



இந்திய விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பினார்.
புகையிலை பாவனை கட்டுப்பாட்டு தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட மாநாட்டின் பிரதான உரையை ஜனாதிபதி நிகழ்த்தியிருந்தார்.
புதுடில்லியில் இருந்து இரவு 10.05 அளவில் ஜனாதிபதி நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்திய தேசிய நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள ஶ்ரீ கபிலவஸ்து புனித சின்னங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (07) மாலை தரிசித்துள்ளார்.
இதனையடுத்து ஜனாதிபதி தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினர், இந்திய தேசிய நூதனசாலையை பார்வையிட்டனர்.
அதன் பின்னர் மஹாபோதி சங்கத்தின் புதுடெல்லியில் அமைந்துள்ள நிலையத்திற்கும் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்குப் பின்னர் மஹாபோதி சங்கத்திற்கு விஜயம் செய்த இலங்கைத் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளங்குகின்றார்.
இதன்போது ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன், அங்கு நிறுவப்பட்டுள்ள அநகாரிக்க தர்மபால உருவச் சிலைக்கும் ஜனாதிபதி மலரஞ்சலி செலுத்தினார்.