காரைதீவு குடும்பஸ்தரின் சடலம் கொழும்பில் மீட்பு




கொழும்பில் கடந்த 4 தினங்களாக காணாமல்போயிருந்த, காரைதீவைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் நேற்று (07) மொறட்டுவயிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு முன்னாலுள்ள, ஆற்றின் அருகே இருந்த பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் மனைவி உட்பட குடும்பத்தினரை கொழும்புக்கு வருமாறு பொலிஸார் அழைத்துள்ளனர்.

காரைதீவைச் சேர்ந்த 38 வயதான வேலுப்பிள்ளை விவேகானந்தன் என்பவரே இவ்விதம் காணாமல்போயிருந்தவர். ஒருபிள்ளையின் தந்தையான இவரின் மனைவி ஆசிரியையாவார்.


இவர் கடந்த ஒரு வருடகாலமாக தச்சுத்தொழிலாளியாக வேலைசெய்துவந்துள்ளார். மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் வேலை நடப்பதால் அங்கு ஒரு அறையில் தங்கியிருந்து ஏனைய சகதொழிலாளர்களுடன் வேலை செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீட்கப்பட்ட சடலத்தை மொறட்டுவ பொலிசார் மேலதிக பரிசோதனை மற்றும் விசாரணைக்காக மொறட்டுவ வைத்தியசாலையில் வைத்துள்ளனர்.

நாளை சகல பரிசோதனை மற்றும் விசாரணையின் பின்பு மொறட்டுவயில் சடலம்பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் நடக்குமென குடும்பத்தின் சார்பில் உயிரழந்தவரது தம்பி, வேலுப்பிள்ளை நமசிவாயம் தெரிவித்தார்