கொழும்பு, வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தினால் பொலிஸ் பதிவுக்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வெள்ளவத்தை பொலிஸ் நிலைய எல்லைக்குள் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களும் தங்கள் வீட்டிலுள்ளவர்களின் சகல விபரங்களையும் பொலிஸாருக்கு அறியத்தருமாறு குறித்த படிவத்தில் கோரப்பட்டுள்ளது.
இது குறித்து விபரம் அறிந்தவுடன் தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் சம்பவம் குறித்து தனது கண்டனத்தை வன்மையாக பதிவு செய்துள்ளார்.
அத்துடன் அவர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில விஜேமான்னவைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, நைஜீரியா போன்ற வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கியுள்ளவர்களை இனம் காணும் நடவடிக்கையாகவே குறித்த பொலிஸ் பதிவு முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், அவ்வாறாயின் வெளிநாட்டவர் தங்கியிருக்கும் வீடுகளில் மாத்திரம் பொலிஸ் பதிவு நடைமுறையை அமுல்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடமும் இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக குறித்த பொலிஸ் பதிவு நடைமுறையை இடைநிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.

