பாட்டன், பூட்டன் காடு வெட்டிய காணியை தொழிலாளர்கள் ஆள வேண்டும்



(க.கிஷாந்தன்)

கூட்டு ஒப்பந்தத்தின் படி செய்ய வேண்டியதை ஒழுங்காக செய்திருந்தால் காங்கிரஸ் இன்று தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் செய்திருக்காது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட சட்ட விதிகளை மீறி தொழிலாளர்களை அடக்கு முறைக்குள் கொண்டு வரும் தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்கள் பேரணியுடன் போராட்டம் மற்றும் ஒப்பந்தம் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு ஒன்று அட்டனில் 17.11.2016 அன்று இ.தொ.காவின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.

இதன்போது அட்டன் டீ.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற ஒப்பந்தம் தொடர்பிலான தெளிவூட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், தெரிவித்ததாவது,

1967ம் ஆண்டு காலப்பகுதியில் 10 சதம் சம்பள உயர்வாக பெறப்பட்டு வந்த நிலையில் 1992ம் ஆண்டு முதல் கூட்டு உடன்படிக்கை ஊடாக உயர்வான சம்பள தொகையை தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் பெற்றுக் கொடுத்து வருகின்றது.

மலையக மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுகின்றது. உடன்படிக்கை கைச்சாத்திடும் வேளையில் முதலாளிமாருக்கு சமனாக தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்கங்களும் அமர வேண்டும் என்பது தானை தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் காட்டிய வழியாகும்.

இதனால் மக்களின் ஒற்றுமையும் பலமும் காங்கிரஸிற்கு தேவை என்பதை வழியுறுத்தினோம். பெறப்பட்டுள்ள 730 ரூபாய் சம்பளமானது மக்களின் சக்தியினாலேயே பெறப்பட்டது.

நம் மத்தியில் ஒற்றுமையும் பலமும் நிறைந்து இருப்பதனால் கூட்டு ஒப்பந்தம் செய்யக்கூடிய அந்தஸ்தை காங்கிரஸ் பெற்றுள்ளது. இதை உலக நாடுகளும் வரவேற்கின்றது. இதனூடாக உலக நாடுகளும் எம்மை வரவேற்கின்றது.

ஆனால் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படை தெரியாதவர்கள் கேலிக்கூத்தாக நினைக்கின்றார்கள். நாள் ஒன்றுக்கு ¼ போத்தல் மது அருந்தும் ஒருவர் செலவு செய்வது 400 ரூபாய். இதில் 200 ரூபாயை பிள்ளைக்கு சேமித்துவிட்டு 200 ரூபாய்க்கு மது அருந்தலாம் தானே. 

நான் குடிப்பதை தடுக்கவில்லை. சிகரட் ஒன்றின் விலை 57 ரூபாய் பீடா ஒன்றின் விலை 30 ரூபாய் ஆனால் இவ்வளவு செலவு செய்யும் தொழிலாளர்கள் தமது உரிமையை கட்டிக்காக்கும் தொழிற்சங்கத்திக்கு நாளொன்றுக்கு 5 ரூபாய் சந்தா பணம் மாத்திரமே செலுத்துகின்றனர்.

இருந்தும் சந்தாவை நிறுத்துவதாக பல தோட்டங்களில் கோஷம் இடுகின்றனர். சந்தா என்பது தனி மனிதனின் உரிமையாகும். இதை கட்டிக்காத்துக் கொள்ள வேண்டும். 

தோட்டப்பகுதிகள் அங்குள்ள நிலங்கள் நமது மக்களின் பூர்வீக சொத்தாகும். நமது முன்னோர்களால் வளப்படுத்தப்பட்டு வந்த சொத்தை எவருக்கும் விட்டுக்கொடுக்கவோ அல்லது பிரித்துக் கொடுக்கவோ முடியாது.

நமது பாட்டன், முப்பாட்டன் வளப்படுத்திய இவ் பூமி எமது மக்களுக்கு சொந்தமாக வேண்டும். 7 பேர்ச் என்பது வரவேற்கதக்க கூடிய ஒன்றல்ல. இதனை காங்கிரசும் சரி நானும் சரி பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானும் விரும்பவில்லை.

ஆனால் தலா 2 ஏக்கர்கள் நமது மக்களுக்கு தேவைப்படுகின்றது. இவ்வாறாக நம் உரிமைகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கென நமது மத்தியில் ஒற்றுமையும் கட்டுப்பாடும் அதிகமாக காணப்படும் வேண்டும் என்பது அவசியமாக காணப்படுகின்றது என அவர் மேலம் தெரிவித்தார்.