அண்மைக்காலமாக நாட்டில் நிலவிவருகின்ற இனவாத நடவடிக்கைகளின் தொடரில் நேற்றைய தினம் ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனாவின் பிக்குமார் அடங்கிய குழுவினர் மட்டக்களப்பிற்கு விஜயமொன்றினை மேற்கொள்ள எடுத்த முயற்சிகள் மட்டக்களப்பு பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் பதட்டமான, அச்சமான சூழ் நிலையினை தோற்றுவித்திருந்தது. இது தொடர்பில் பரப்பப்பட்ட உண்மைக்கு புறம்பான செய்திகள் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அச்சமான மனோ நிலைகளை தோற்றுவித்திருக்கிறது.
பொதுபல சேன குழுவினர்களின் விஜயத்தினை நிதானமாக கையாளும் விதத்தில் NFGGயானது நேற்று முன்தினம் தொடக்கம் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது.
ஞானசார தேரர் உட்பட்ட குழுவினருக்கும் முஸ்லிம் சிவில் சமூக தலைமைத்துவங்களுக்கும் இடையிலான சினேகபூர்வமான கலந்துரையாடல் ஒன்றினை நடாத்துவதன் மூலம் இப்பிரச்சனையின் பாரதூரத்தினை தணிப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் பொதுபல சேன குழுவிலுள்ள சிலர் இதனை வரவேற்றிருந்தாலும் வேறு சிலர் அதனை மறுத்து விட்டிருந்தனர். இதன் மூலம் இவர்களது விஜயத்தின் உண்மையான பின்னணியினை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.
கடந்த காலங்களில் தெற்கிலுள்ள பெரும்பான்மை சிங்கள மக்களினால் நிராகரிக்கப்பட்ட அமைப்பாக காணப்பட்டு வந்த பொதுபல சேனா அமைப்பானது தற்பொழுது சரிந்து போயிருக்கும் தங்களது ஆதரவினை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை ஊக்குவிப்பதன் ஊடாக அவர்களை ஒன்றுதிரட்டி அதன் மூலம் தற்போதைய ஆட்சியாளர்களை நெருக்கடிக்குள்ளாக்குவதையினையும் இவர்கள் சமாந்தரமான குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.
இதன்மூலம் நாட்டிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை கேள்விக்குள்ளாக்குவதும் இவர்களின் மற்றொரு பிரதான நோக்கமாகும். பொதுபல சேனா போன்ற இனவாத சக்திகளின் பின்னிணியில் நின்று செயற்படுகின்ற அரசியல் சக்திகளின் நோக்கமும் இதுவேயாகும். இதன் காரணமாகவே இன்று நீதிமன்ற ஆணையினையும் மீறி இவர்கள் மட்டக்களப்பு நகருக்குள் நுழைய பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர்.
இதன் மூலம் இங்குள்ள மக்களின் உணர்வுகளைத்தூண்டி விட்டு அதன்மூலம் ஏற்படும் பதட்ட நிலமையினை தங்களுக்கு சாதகமான செய்திகளாக தெற்கிலுள்ள மக்களுக்கு சொல்லி அங்கும் பதட்டமான சூழலை உருவாக்குவதே இவர்களின் நேற்றைய விஜயத்தின் நோக்கமாகும்.
எனவே இப்பிரச்சனையினை வெறுமனே அரசியல் அதிகாரங்களையோ அல்லது இறுக்கமான சட்ட ஒழுங்கு நடைமுறைகளையோ மாத்திரம் பயன்படுத்தி முடிவிற்கு கொண்டு வர முடியாது என்பதினையும் சில ராஜதந்திர அணுகுமுறைகளைக் கையாள்வதன் மூலமே இதனை சுமூகமாக கையாள முடியும் என்பதினையும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
இதற்கான சில நடவடிக்கைகளையும் NFGG மேற்கொள்ள தொடங்கியிருக்கிறது.
நேற்று மட்டக்களப்பில் ஏற்பட்ட பதட்ட நிலமைகள் குறித்து NFGG சில உயர்மட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் பாதுகாப்பு செயலாளர், தேசிய புலனாய்வுக்குப் பொறுப்பான பணிப்பாளர் மற்றும் தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளுடன் தொடர்பு பட்ட உயர் அதிகாரிகள் ஆகியோர்களுடன் நேரடியாக கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் தொடர்பில் வலியுறுத்தப்பட்டது. அவர்களும் அதனை செய்வதாக உறுதியளித்துள்ளார்கள்.
அத்ததோடு பௌத்த மக்களின் நன்மதிப்பைப்பெற்ற தேசிய நல்லிணக்கத்தை மனமாற விரும்புகின்ற பௌத்த பிக்குமார்களுடனும் தொடர்பு கொண்டு அவர்களது ஒத்துழைப்புக்களை இதில் நேரடியாக பெற்றுக்கொண்டு இவ்விடயத்தை ராஜ தந்திரமாக கையாள்வதற்கு NFGG முயற்சிகளை மேற்கொள்கிறது. இதற்காக அனைவரதும் ஒத்துழைப்பும் அவசியப்படுகிறது.
எனவே, இவ்விடயங்கள் தொடர்பில் உணர்வு பூர்வமாக நடந்து கொள்வதினை தவிர்த்து மிகவும் பொறுமையாகவும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் எல்லோரும் நடந்து கொள்ள வேண்டுமென NFGG கேட்டுக்கொள்கிறது.

