விசேட சட்டமூலமொன்றின் ஊடாக சிறப்பு அமைச்சர் பதவியொன்றை உருவாக்குவதற்கு எடுக்கும் முயற்சி தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் ஊடாக உருவாக்கப்படவுள்ள அதிகாரங்களில் குற்றவியல் அல்லது சிவில் வழக்குகளை தாக்கல் செய்ய முடியாமை தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
சட்டமூலத்தின் 51 ஆவது சரத்தின் அ மற்றும் ஆ பிரிவுகளுக்கு அமைய இந்த சட்டத்தின் ஊடாக ஸ்தாபிக்கப்படவுள்ள நிறுவனங்களைச் சேர்ந்த எவரும் நல்லெண்ணத்துடன் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் குற்றவியல் அல்லது சிவில் வழக்கை தாக்கல் செய்ய முடியாது.
அரசியலமைப்பின் பிரகாரம் இதுவரை இத்தகைய சட்ட விலக்களிப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புரிமை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அறிவிக்கப்பட்ட 100 நாட்களின்போது நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் இலகுபடுத்தப்பட்டது.
இதற்கமைய ஜனாதிபதிக்கு எதிராகவும் சட்ட உதவியை நாடுவதற்கான சந்தர்ப்பம் தற்போது உருவாகியுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தமது அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் மென்மேலும் அதிகாரங்கள் குவியும் அமைச்சர் பதவியொன்றை உருவாக்குவதற்கான சூழல் புதிய சட்டமூலத்தின் ஊடாக ஏற்பட்டுள்ளதாக சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்

