கருணாவை தேடி ஓடிய மஹிந்த கம்பனி



கருணா அம்மான் என்று அறியப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரை சந்திப்பதற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சீ.பி. ரத்நாயக்க ஆகிய மூவரும் இன்றைய தினம் நண்பகல் மகஸின் சிறைச்சாலைக்கு சென்றனர்.
கருணா அம்மான் மற்றும் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருடன் சுமார் ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடிய பின்னர் குறித்த மூவரும் சிறைச்சாலையிலிருந்து திரும்பினர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இடையில் நாட்டைப் பிளவுபடுத்தும் ஒப்பந்தமொன்று கைச்சாத்தாகியிருப்பதாக போலி ஆவணங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று, குண்டுத் துளைக்காத 80 இலட்சம் ரூபா பெறுமதியான அரச வாகனத்தை பதவியிலிருந்து விலகிய பின்னரும் வைத்திருந்த குற்றச்சாட்டில் கருணா அம்மான் கடந்த 29ஆம் திகதி கைது பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.