Suhaib Umarlebbe
அக்கரைப்பற்று இசன்கனிச்சீமையிலிருந்து ஆலம்குளம், தீகவாப்பி வழியாக 08 ஆம் கட்டையை சென்றடையும் RDA இற்குச் சொந்தமான வீதியின் 01 ஆம் இலக்கப் பாலத்தடியிலிருந்து ஆலங்குளச் சந்தி வரையிலான வீதியோரங்களில் மரங்கள் பற்றைக் காடுகள் போன்று வளர்ந்து காணப்படுவதுடன் வாய்க்கால்களையும், வடிகான்களையும் மூடிய நிலையில் உள்ளது.
அவற்றின் மூலம் அப்பாதையினைப் பற்றிய பரீட்சயம் இல்லாத பல பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் வீணான வாகன விபத்துகளுக்கு உள்ளாக வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர்.
பாதையோரங்களின் மின் கம்பங்களிலுள்ள வீதி மின் குமிழ்களினை On / Off செய்வதிலும் கூட அப்பிரதேச குடியிருப்பாளர்கள் பெரும் சிரமங்களினை எதிர் கொள்கின்றனர்.
அது மாத்திரமல்ல அவ்வீதியின் ஓரங்களில் காட்டு யானைகள் மறைந்திருந்தால் கூட அவற்றைக் கண்டு கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு அப்பிரதேச மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அப்பிரதேசங்கள் காட்டு யானைகள் மாறுகின்ற ஒரு பிரதேசமாகவும் காணப்படுகின்றது.
அது விடயத்தில் அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக மாகாணப் பணிப்பாளர் அவர்களும் மற்றும் ஏனைய நிறைவேற்றுப் பொறியியலாளர்களும் ஒன்றிணைந்து வீதியோரங்களிலுள்ள மரப்பற்றைகளை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

