இலங்கை அணியுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான இன்று தென் ஆபிரிக்க வீரர்களான ஹஷிம் அம்லா, ஜீன் போல் டுமினி ஆகியோர் சதம் குவித்தனர். ஹஷிம் அம்லா, தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் 100 ஓட்டங்களைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜொஹானெஸ்பேர்க், தி வொண்டரர்ஸ் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்ஆபிரிக்க அணித்தலைவர் பவ் டூ பிளேசிஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
ஸ்டீபன் குக் 10 ஓட்டங்களுடனும் எல்கர் 27 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அவர்களையடுத்து களமிறங்கிய, ஜீன் போல் டுமினியும் ஹஷிம் அம்லாவும் சதங்களைக் குவித்ததுடன் 3 ஆவது விக்கெட்டுக்காக 292 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
டுமினி 155 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரின் 6 ஆவது டெஸ்ட் சதமாகும். ஹஷிம் அம்லா ஆட்டமிழக்காமல் 125 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இது அம்லாவின் 26 ஆவது டெஸ்ட் சதமாகும்.
இன்றைய ஆட்டமுடிவின்போது தென் ஆபிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 338 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் லஹிரு குமார 79 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

