-ஏ.எச்.ஏ. ஹுஸைன் –
வறட்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (13.01.2017) இடம்பெற்ற விஷேட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் விவரம் தெரிவிக்கப்பட்டது.
“வறட்சியான காலநிலையை எதிர்நோக்குதலும், உணவுப் பாதுகாப்பும், வறுமையில் இருந்து விடுவிக்கும் ஆண்டு” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த மாவட்ட அபிவிருத்திக்குழு விஷேட கூட்டம் நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்த மாவட்ட அபிவிருத்திக் குழு விஷேட கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். வியாழேந்திரன், அலிசாஹிர் மௌலானா, மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் நித்தியானந்தம் (பிரசன்னா), மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ், மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரெட்ணம் உட்பட திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இம்முறை பருவ மழை வீழ்ச்சி போதியளவு கிடைக்காமல் பொய்த்துப் போனதால் மாவட்டத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் சுட்டிக்காட்டப்பட்டது.
இம்முறை பருவ மழை வீழ்ச்சி போதியளவு கிடைக்காமல் பொய்த்துப் போனதால் மாவட்டத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் சுட்டிக்காட்டப்பட்டது.
வறட்சியின் காரணமாக 20 ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 70 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் முக்கியமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவது பற்றியும் கூட்டத்தில் அரசியல் தலைமைகளாலும் அதிகாரிகளாலும் ஆராயப்பட்டது.
வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிப்பது தொடர்பாகவும் வறட்சியான காலநிலை மேலும் நீடிக்குமானால் அதற்குத் தாக்குப் பிடிக்கக் கூடியதாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன் ஆயத்தப் பணிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பபட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

