யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற சில குற்றச்செயல்கள் தொடர்பில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் அரசடி சந்தி பகுதியில் மோட்டார் சைக்களில் சென்ற அடையாளந் தெரியாத கோஷ்டியினர் கடையொன்றிற்கு நேற்றிரவு தீவைத்து, அங்கிருந்த இரண்டு இளைஞர்களை வாளால் தாக்கிவிட்டு தலைமறைவாகினர்.
இந்த சம்பவத்தையடுத்து, பொலிஸார் இன்று (31) நடத்திய தேடுதலின்போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஐவர் கைதுசெய்யப்பட்டதாக யாழ். பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணைகளில், நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த பொலிஸ் உயரதிகாரி தெரிவித்தார்.
சந்தேபநபர்களிடம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவர்களை நாளை (01) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக யாழ். பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி குறிப்பிட்டார்.
இதேவேளை, நேற்றிரவு நடத்தப்பட்ட வாள்வெட்டில் காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

