அறுகம்பை களியாட்ட நிகழ்வில் சட்ட விரோத மதுவிற்பனை



அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் அறுகம்பை பகுதியில் கடற்கரைப்பகுதியில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் சட்ட விரோதமான முறையில் பியர் டின்களை விற்பனை செய்தவருக்கு இரண்டு இலட்சம் ரூபா அபராதமும் ஒத்துவைக்கப்பட்ட ஐந்து வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை அரும்பபைக்கு அருகில் உள்ள சாஸ்திரயார் வெளி பகுதியில் உள்ள கடற்கரையில் இந்த நிகழ்வில் சட்ட விரோதமான முறையில் விற்பனை செய்த 3400 பியர் டின்களை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியிருந்ததுடன் அதனை விற்பனை செய்த ஒருவரையும் கைதுசெய்திருந்தனர்.
மட்டக்களப்பு –அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தலைமையில் சென்ற அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா அடங்கிய குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர் இன்று பொத்துவில் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிவான் நீதிமன்ற நீதிபதி எச்.ஐ.வஹாப்டின் இரண்டு இலட்சம் ரூபா அபராதமும் ஒத்துவைக்கப்பட்ட ஐந்து வருட சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதேவேளை குறித்த நபருக்கு பியர் டின்களை விற்பனை செய்த மட்டக்களப்பை சேர்ந்த விற்பனையாளருக்கு மட்டக்களப்பு –அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சர் என்.சுசாதரனினால் மதுவரித்திணைக்களத்திற்கு தொழில்நுட்ப குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன்,
அது தொடர்பான புலனாய்வு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மட்டக்களப்பு –அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சர் என்.சுசாதரன் தெரிவித்தார்.