உண்ணாவிரதம்



இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா மாவட்ட ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா டிப்போவில் உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (02) ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பின் தொடர்ச்சியாக இன்று உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வீதியில் அமைக்கப்பட்டுள்ள வவுனியா புதிய பஸ்தரிப்பிடம் தங்களுக்கு வேண்டாம் என தெரிவித்தும் இதுவரை காலம் நகர் மத்தியில் காணப்பட்ட பழைய பஸ் தரிப்பிடத்தைக் கோரியும் அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா டிப்போ முகாமையாளரை உடனடியாக மாற்றம் செய்யுமாறும், போக்குவரத்து சபை ஊழியர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும் இந்த உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போக்குவரத்து சபை ஊழியர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மன்னார் டிப்போ ஊழியர்களும் வவுனியா டிப்போவிற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
குறித்த மூன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்து நேற்று வட மாகாணம் முழுவதும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.