நீதிமன்றங்களின் நீதிபதிகளாக நியமிப்பதற்கு சிரேஷ்ட சட்டத்தரணிகளை நியமிப்பதற்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று குழுவின் ஆலோசனை பெறப்பட வேண்டும் என்ற சட்டம் இல்லை என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜெப்ரி அழகரட்ணம் கூறினார்.
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் ராமநாதன் கண்ணன் மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதையடுத்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதிபதிகள் சங்கமான நீதிச் சேவை சங்கத்துக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல், திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டது தொடர்பாக ஜெப்ரி அழகரட்ணமிடம் அத தெரண வினவியது.
சட்டத்தரணிகள் சங்கத்தில் மூத்தவர்களை நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டால் அதனை சட்ட மா அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைப்பது வழமையானது என்றும், அதன்படி மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தினால் ராமநாதன் கண்ணனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதையடுத்து அதனை தான் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறினார்.
விஷேடமாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மொழி பேச தெரிந்த நீதிபதிகளின் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதன்காரணமாக அவர்கள் முன் வைத்த அந்த யோசனையை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததாகவும், இதன்போது தலைவர் என்ற வகையில் தனக்கிருந்த அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னரும் பல தடவைகள் சிரேஷ்ட சட்டத்தரணிகள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சந்தர்ப்பங்களின் போது எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் இந்த சம்பவத்தின் காரணமாக தமது சங்கத்திற்கும் நீதிபதிகள் சங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில் தான் வருத்தமடைவதாகவும், இது தீர்க்கப்பட வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜெப்ரி அழகரட்ணம் கூறினார்.

