மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இவ்வருடம் முப்பத்தேழு பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எச்.எம்.பளீல் தெரிவித்தார்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட முப்பத்தேழு பேரில் அதிகளவானவர்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் டெங்கு நுளம்பின் தாக்கத்தினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், ஓட்டமாவடி பிரதேச சபை என்பவற்றுடன் இணைந்து வீடு விடாக சென்று டெங்கு பரவும் இடங்களை இனம்கண்டு துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள ஆறாயிரத்து மேற்பட்ட வீடுகளுக்கு சென்று டெங்கு தொடர்பாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது அதில் 1115 குடும்பங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு டெங்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அதனை துப்பரவு செய்யாமல் விடும் பட்சத்தில் இவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் தெரிவித்தார்.
அந்த வகையில் மீறாவோடை பகுதியிலுள்ள வீடுகளுக்கு சென்று வளவினுள் காணப்படும் நீர் தேங்கி கிடக்கும் பொருட்களை அவ்விடத்திலிருந்து மீறாவோடை பிரதேச இளைஞர்கள் அப்புரப்படுத்தும் நடவடிக்கையில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர்.
இதில் ஓட்டமாவடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எச்.எம்.பளீல், பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.எம்.அனீஸ், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் கே.பீ.எஸ்.ஹமீட், பிரதேச பள்ளிவாயல்களின் உறுப்பினர்கள், இளைஞர்கள், ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
(குகதர்சன்)

