கொள்ளையர்களிடம் இருந்து தப்பிய கப்பல் பிரதானி அனுபவத்தை கூறுகிறார்



தம்மை விடுவிப்பதற்கு பாடுபட்ட ஜனாதிபதி, வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அரசாங்கம் மற்றும் தெரண ஊடகத்திற்கும் நன்றி தெரிவிப்பதாக எரிஸ் - 13 கப்பலின் பிரதானி ருவன் சம்பத் கூறினார். 

தெரண ஊடகம் தொடர்ந்து தம்முடன் கதைத்து தகவல் பெற்றதாகவும், அரசாங்கத்தின் கவனத்தை திருப்புவதற்காக தொடர்ந்து செயற்பட்டதாகவும் அத தெரணவிடம் அவர் கூறினார். 

தாம் அணிந்திருந்த உடை, தெலைபேசி தவிர ஏனைய அனைத்தையும் கொள்ளையர்கள் பறித்துக் கொண்டதாக தொலைபேசியினூடாக தொடர்பு கொண்ட சம்பத் அத தெரணவிடம் கூறினார். 

கொள்ளையர்களிடம் அவர்கள் சிக்கிக் கொண்டிருந்த போது முகங்கொடுத்த நிலமைகளை அவர் இவ்வாறு விபரிக்கின்றார். 

"முதலில் 13ம் திகதி மாலை தான் அவர்கள் எம்மை பிடித்துக் கொண்டார்கள். அவர்களுடைய நிலப்பகுதிக்கு எமது கப்பலை எடுத்துச் சென்றார்கள். அவர்களுடைய கைகளில் பல ஆயுதங்கள் இருந்தன். பின்னர் அவ்விடத்திற்கு மேலும் ஒரு குழு வந்தது. அவர்களிடம் எம்மை ஒப்படைத்தார்கள். பின்பு அவர்கள் தெரிந்துகொண்டார்கள் படையினரால் தாக்குதல் நடத்தப்படுகின்றது என்று. பின்பு எம்மை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. 

பின்னர் பளுளா என்று மற்றொரு குழு வந்தது. அவர்கள் நங்கூரம் மீது ஏறினார்கள். அங்கு இன்னொரு குழு வந்து அவர்கள் பொறுப்பெடுத்து நங்கூரம் பண்ணிய பின்னர் தான் படையினர் தாக்குதல் செய்தனர். தாக்குதல் செய்யும் போதெல்லாம் எம்மை வௌியில் போட்டார்கள். அவர்கள் தாக்குதல் நடத்தும் போது எம்மை கொன்று விடுவதாக கூறினார்கள். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டோம். ஒரு தடவையும் அடிக்கவில்லை. சாப்பாடு போதுமான அளவு இருக்கவில்லை. எமது சாப்பாடு இருந்தது. அவற்றையும் அவர்கள் எடுத்துச் சென்றார்கள். எங்களுக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை. கப்பலுக்கு தான் சேதம் ஏற்பட்டது. 

இந்த கப்பல் கொள்ளையர்களை தாக்குவதற்காகவே சோமாலியாவில் விஷேட படை இருக்கிறது. அவர்கள் தான் எம்மை காப்பாற்றுவதற்காக தாக்குதல் செய்தார்கள். பின்னர் கொள்ளயர்கள் தப்பிச் சென்ற பின் எம்மை கப்பலுக்கு வௌியில் எடுத்தார்கள். அவர்கள் எமது கப்பலுக்கு வந்து கப்பலை பொறுப்பெடுத்து எம்மோடு வந்து கொண்டிருக்கின்றார்கள்." 

இதேவேளை தற்போது பிரான்ஸ் யுத்தக் கப்பல் மற்றும் சோமாலிய கடற்பாதுகாப்பு தரப்பினர் இணைந்து காப்பாற்றப்பட்ட கப்பல் மற்றும் நபர்களை சோமாலியாவின் பொஸாஸோ நகரிற்கு கொண்டு சென்று கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.