கச்சதீவிலிருந்து



-கச்சதீவிலிருந்து ஜே.ஏ.ஜோர்ஜ்- 
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா, கொடியேற்றத்துடன் சனிக்கிழமை ஆரம்பமாகி,  ஞாயிற்றுக்கிழமை காலை ஒப்புகொடுக்கப்பட்ட திருவிழாத் திருப்பலியுடன் நிறைவடைந்தது. இலங்கையில் இருந்து 6,600 பக்தர்கள் இந்த  திருவிழாவில் கலந்துகொண்டனர். கச்சதீவு புனித அந்தோனியாரின் புதிய ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதல் திருவிழாவின் திருப்பலியை, யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரத்தினம் யோசவ்தாஸ் தலைமையில் அருட்தந்தை நேசன், அருட்தந்தை ஜோஜின், அருட்தந்தை டேவிட், அருட்தந்தை மங்கலம் ஆகியோர், கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். 

இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அருட்தந்தையர், அருட் சகோதரிகள் பங்கேற்றிருந்தனர். திருவிழா ஏற்பாடுகளை, நெடுந்தீவு பங்குத்தந்தை அ.ஜெ.அன்ரனி ஜெயரஞ்சன் மேற்கொண்டிருந்தார். திருவிழாவுக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சேவைகளை இலங்கைக் கடற்படையினரும் சிவில் பாதுகாப்பைப் பொலிஸாரும் வழங்கியிருந்தனர். பக்தர்களுக்கான உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளையும் மருத்துவ சேவைகளையும், கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர். -