அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் மாணவ தலைவர்களைத் தேர்வு செய்யும் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் ஒன்று இடம்பெற்றது.
வரலாற்றில் முதன் முறையாக இடம்பெற்ற இத்தேர்தல், 2017 ஆம் ஆண்டிற்கான மாணவத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்காக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தல் இன்று (04) அதிபர் எம். கிருபைராஜா தலைமையில் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
காலை 9 மணிமுதல் ஆரம்பமான இத்தேர்தலில் பாடசாலை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டு வாக்களிப்பில் ஈடுபட்டனர்.
95 மாணவ தலைவர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற இத்தேர்தலில் 145பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியதுடன் 1117 மாணவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
அதிபர் எம்.கிருபைராஜா மேற்பார்வையில் நடைபெற்ற இத்தேர்தல் நடவடிக்கைகளில் பிரதி அதிபர் உள்ளிட்ட 25 ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வரலாற்றில் முதல் தடவையாக நடைபெற்ற பாடசாலை மாணவ தேர்தல் முறையானது தங்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தந்ததாகவும் இதன் மூலம் தேர்தல் தொடர்பான தங்களது அறிவையும் ஆளுமையையும் அதிகரிக்க முடிந்ததாகவும் மாணவர்கள் இங்கு கருத்து தெரிவித்தனர்.
மேலும் இச்சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்த கல்வி அமைச்சுக்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் மாணவர்கள் குறிப்பிட்டனர்.

