மலையகத்தில் மேதின ஏற்பாடுகள்



(க.கிஷாந்தன்)

மலையகத்தின் இரண்டு பிரதான கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் தலவாக்கலை மற்றும் கினிகத்தேனை பகுதிகளிலும் நடைபெறவுள்ளன.

அந்தவகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இம்முறை மேதினக் கூட்டம் தலவாக்கலை பொது மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் பீ.திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் இம்முறை மே தினக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாளை முதலாம் (01.05.2017) திகதி தலவாக்கலை நகரத்திலிருந்து தலவாக்கலை நகர சபை மைதானம் வரை மே தினப் பேரணியொன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு 30.04.2017 அன்று தலவாக்கலை நகரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது மே தின நிகழ்வுகளை கினிகத்தேனை நகரில் நடத்தவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும், எதிர்ப்பார்ப்பையும் இதன்போது மக்கள் வெளிப்படுத்துவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.