(Siraj Mashoor)
மர்ஹூம் எம்.எம்.எம். றஸீன் சேரினால் மூதூர் மத்திய கல்லூரியில் உருவாக்கப்பட்ட தாவரவியல் பூங்கா, புனருத்தாரணம் செய்யப்பட்டு இன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கும் கிட்டியது.
றஸீன் சேர் எங்களது Botany ஆசிரியர். மிகுந்த அர்ப்பணிப்பும் சமூக நோக்கும் கொண்டவர். அவருடைய மனைவி சித்தி ரீச்சர் எங்களது Chemistry ஆசிரியை. அவர்தான் இன்று இந்தப் பூங்காவைத் திறந்து வைத்தார்.
சித்தி ரீச்சர், றஸீன் சேரின் மகன் ஷபீப், சகோதரர், நண்பர்களான Dr.ஸாஹிர், ஷரீப் சேர், மாகாண சபை உறுப்பினர் லாஹிர் உட்பட பலரும் இங்கு உரையாற்றினர்.
1993 இல் திருகோணமலையிலிருந்து மூதூருக்குச் சென்ற 'லோஞ்ச்' (பயணிகள் படகு) பாதாள மலையருகே மூழ்கியதில் றஸீன் சேர் மௌத்தாகிப் போனார். அப்போது நாங்களும் ஒரு சிறு றோணியோ பிரசுரத்தை வெளியிட்டோம். இதனை Stencil இல் கவராயம் மூலம் வடிவமைத்தவர் நண்பர் Rashmy Ahamed. அதன் பிரதியை எனக்கு அனுப்பி வைத்த என் வகுப்புத் தோழனும் றஸீன் சேரின் மருமகனுமான முஹைஸுக்கு Musthafa Muhaiz நன்றி.
றஸீன் சேர் தனிப்பட்ட முறையில் என்னோடு மிகுந்த அன்பு கொண்டிருந்தார். நான் ஒரு வைத்தியராக வர வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. எனக்கு அதில் ஈடுபாடு இருக்கவில்லை. பின்னர் கலைத் துறைக்கு மாறி விட்டேன்.
அவருடைய முயற்சியால் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் தாவரவியல் பூங்காவொன்றை உருவாக்கியிருந்தார். அதில் நாங்களும் பங்குபற்றியிருந்தோம்.
அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனபதியை அருள்வானாக.



Post a Comment
Post a Comment