முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து ஒரே விதமாகவே செயற்பட வேண்டும்



முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து ஒரே விதமாகவே செயற்பட வேண்டும் என, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

தற்போது நாட்டில் யுத்தம் இல்லை, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு கோருவது ஏன் என புரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அதாவது தான் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்று சுமார் 15 மாதங்களில் மஹிந்த மற்றும் அவரது சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர், தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீக்கும் படி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், தான் 2005ம் ஆண்டு நவம்பர் ஓய்வு பெற்ற வேளை இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும் சந்திரிக்கா கூறியுள்ளார்.

இதற்கமைய, விடுதலைப் புலிகளால் தனக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தாம் ஓய்வுபெற்றதன் பின்னர் தமது பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு சபையின் விசேட குழுவொன்று ஆராய்ந்ததாகவும், அவர்கள் தேவையான ஆயுதங்களுடன் 300 பாதுகாப்புத் தரப்பினரை வழங்க வேண்டும் என பரிந்துரை செய்ததாகவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார். 

எனினும், தான் அந்த பரிந்துரையை நிராகரித்ததாகவும் 150 பேர் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் உள்ளிட்ட 10 வாகனங்களை மட்டுமே தான் ஏற்றுக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்படுவது குறித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தியதாக, கூறியுள்ள, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து ஒரே விதமாகவே செயற்பட வேண்டும் என்பதை நினைவூட்ட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.