உன்னதமான பொசன் பௌர்ணமி தினத்தில் மாமர நிழலில் தர்ம போதனைகளை செவிமடுத்தவர்களைப் போன்று, மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் ஒழுக்கத்தைப் பேணி சுற்றாடலுக்கு நன்மை புரிந்து உலகை மிகச் சிறப்பானதாக மாற்றுவோமென திடசங்கற்பம் பூணுவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அனுப்பிவைத்துள்ள பொசன் பௌர்ணமி வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இரண்டாம் தேவநம்பியதிஸ்ஸ மன்னன் மிகிந்தலையில் அன்று வேட்டையாடலைக் கைவிட்ட இடத்திலிருந்தே இந்நாட்டின் புதிய நாகரிகம் ஆரம்பமானது. அங்கு போதனையை பெற்ற மன்னனுடன், நமது நாடும் பஞ்சசீலத்துக்கு அமைவாக, தயவு மற்றும் கருணையை முன்னிறுத்திய பயணத்தை ஆரம்பித்தது.
அன்று நாம் புதியதொரு சமயத்தின் உரிமையை மட்டுமன்றி, அக்காலத்திலிருந்த பாரத மௌர்ய அரசுகளின் நாகரிகம், கல்வி, இலக்கியம், கட்டடக்கலை, கமத்தொழில் மற்றும் விழுமியம் நிறைந்த வாழ்வியல் ஆகியவற்றை அடையப் பெற்றோம்.
அந்த வகையில் எமது எதிர்காலத்தை உருவாக்கிய வரலாற்றுத் திருப்புமுனையாகவே பொசன் பௌர்ணமி மற்றும் மஹிந்த தேரர் நமது நாட்டுக்கு வருகைத்தந்ததைக் கருத வேண்டும்.
அதனாலேயே மிகிந்தலை புண்ணிய பூமி எமது தேசத்தின் தாய்மடியாக வணங்கப்படுகிறது.
அவ்வாறு தோற்றம் பெற்ற எமது நாகரிகத்தை நோக்கிய பயணம் விலங்குகளின் உயிரைக் கூட மதித்த இன்னா செய்யாமை கொள்கையுடன் பிணைந்துள்ளது. அதனாலேயே உலகின் முதலாவது விலங்குகள் சரணாலயம் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் சுற்றாடலுடன் மிக நெருக்கமான பிணைப்புடன் வாழ்வதற்கு பௌத்தம் நல்கும் வழிகாட்டல், எமது நல்லிருப்புக்கு முதன்மைக் காரணியாக அமைந்துள்ளது.
பௌத்த தர்மம் போதித்த சூழலுடனான பிணைப்பு முறிவடையும் போதே நாம் இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. சுற்றாடலுக்கும் மனிதனுக்கும் இடையிலான பரஸ்பர உறவு முறிவடையும் போது ஏற்படும் இடர்களை, எல்லையற்ற தொழில்நுட்பங்களால் இயற்கைக்கெதிராக மனிதன் செய்யும் தீங்குகளின் எதிர்விளைவுகளே மனிதர்களுக்கு எதிரான தீய விளைவுகளாக உருமாறும் என தீகநிகாய அக்கஞ்ஞ சூத்திரம் எனும் பௌத்த போதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த உன்னதமான பொசன் பௌர்ணமி தினத்தில் மாமர நிழலில் தர்ம போதனைகளை செவிமடுத்தவர்களைப் போன்று, மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் ஒழுக்கத்தைப் பேணி சுற்றாடலுக்கு நன்மை புரிந்து உலகை மிகச் சிறப்பானதாக மாற்றுவோமென திடசங்கற்பம் பூணுவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment