இலங்கையர்களின் வடுக்களை நீதி மாத்திரமே குணப்படுத்தும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் தாமதமின்றி உடனடியாக ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பதில் ஏற்கனவே மிகுந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை கூடிய விரைவில் ஸ்தாபிக்குமாறு, சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசிய வலயத்திற்கான பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அண்மைய நாட்களின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அணுகிய விதம் ஊக்கமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தீர்க்கமான நடவடிக்கைகள் ஊடாக உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்ட வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசிய வலயத்திற்கான பணிப்பாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்
குற்றங்களின் ஆதாரங்கள் சர்வதேச சட்டத்திற்கமைய மேலதிக விசாரணைகள் மற்றும் வழக்கிற்காக அனுப்பப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருவதையும் சர்வதேச மன்னிப்புச்சபை ஞாபகமூட்டியுள்ளது.
அத்துடன், காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தில் பாலின சமநிலை பேணப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் சகல பாகங்களிலுமுள்ள மக்கள் அணுகக்கூடிய வகையில் அந்த அலுவலகம் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
தடயவியல் நிபுணர்கள், தேவைக்கேற்ற திறன், அதிகாரம் ஆகியவற்றைக் கொண்டதாக காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் அமைய வேண்டும் என்பதும் சர்வதேச மன்னிப்புச்சபையின் வேண்டுகோளாகும்


Post a Comment
Post a Comment