திருக்கோவிலில், வாள்வெட்டு




-எஸ்.கார்த்திகேசு - 

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காயத்திரி கிராமத்தில் சனிக்கிழமை (17) இரவு இளைஞர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில், அந்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த வாள்வெட்டை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

மாணிக்கப் பிள்ளையார் முன்வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து சகோதரியுடன் காயத்திரி கிராமத்தில் மரண வீட்டுக்குச் சென்றபோதே, அங்கு இந்த இளைஞர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

திருக்கோவில் முதலாம் குறிச்சியைச் சேர்ந்த யோ.வதனராஜ்  (வயது 22) என்ற இளைஞரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி இளைஞர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞரின் முகம், கை மற்றும் இடுப்புப் பகுதியில் காயங்கள் காணப்படுகின்றன.