இந்த லெபனான் கிராமத்திலிருக்கும் பெண்மணிக்கு வயது 81. அவரைப் பார்க்க சாரி சாரியாக வருபவர்களிடமிருந்து வருவது ஒரே கேள்விதான். எப்படி குப்பையை அகற்ற பெண்கள் தன்னார்வக் குழு ஒன்றை உருவாக்கினீர்கள் என்பதுதான் அது.
2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெருக்களில் குப்பைகள் தேங்கி கிடந்தன. தற்போதும்கூட, தேவையான அளவு குப்பை கொட்டும் இடங்கள் இல்லாததால், நகரத்தின் குப்பைகளில் ஒரு பகுதி கடலில்தான் கொட்டப்படுகின்றது.
அரசாங்கம் ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்தால், மக்கள் எவ்வாறு அவர்களாகவே முன்னெடுக்கும் முயற்சிகள் வாயிலாக வேலைகளை செய்யமுடியும் என்று ஜீனாப் மோக்காலெத் காட்டியுள்ளார்.
''முன்பு இங்கு எல்லா இடங்களிலும் குப்பை கிடைக்கும். குழந்தைகள் அழுக்காக இருப்பார்கள்,'' என்றார் ஜீனாப் மோக்காலெத்.
லெபனானின் தென் பகுதியின் ஒரு பகுதி , 1980 மற்றும் 1990களில், 15 ஆண்டுகள் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், அப்போது தன்னுடைய அராப்சலீம் கிராமத்தில் குப்பைகளை அகற்றும் பணி முழுவதுமாக கைவிடப்பட்டது என்றார்.
ஆண்டுகள் செல்லச்செல்ல, குப்பை குவிந்தது.
பிராந்திய ஆளுநரிடம் உதவி கேட்டார் ஜீனாப் மோக்காலெட் .
''நீங்கள் ஏன் இதை பற்றி கவலைப்படுகிறீர்கள்? நாம் பாரிசில் இல்லை,'' என்றாராம் அவர்.
''அன்று தெரிந்து கொண்டேன், இந்த வேலையை நான்தான் செய்யவேண்டும் என்று ,'' என்றார் ஜீனாப் மோக்காலெட்.
கிராமத்தில் உள்ள பெண்களை அழைத்தார் ஜீனாப் மோக்காலெட். ஆண்களை அழைக்கவில்லை. ஏனெனில் பெண்களுக்கு அதிகாரம் தர வேண்டும் என்று அவர் விரும்பினார்.
மேலும் பெண்கள்தான் இந்த வேலையை சிறப்பாக செய்வார்கள் என்று ஜீனாப் மோக்காலெட் நம்பினார்.
அது மட்டுமல்லாது, ஒவ்வொரு வீட்டிலும் குப்பையைப் பிரித்து, தேவையானவற்றை மறு பயன்பாட்டிற்கு தேவை என பிரிப்பது பெண்கள் கையில்தான் உள்ளது.
இதன்காரணமாக, அவருக்கு வேலைசெய்ய தன்னார்வலர்கள் தேவைப்பட்டனர். வீடுவீடாக சென்று, இந்த விவரங்களை பெண்களிடம் எடுத்துச்சொல்லி புரியவைக்கும் இந்த வேலைக்கு 1990களில் லெபனானில் இருந்த இஸ்லாமிய சமூக ஆண்கள் செய்வது என்பது பொருத்தமற்றதாக இருந்தது.
எந்த உபகரணங்களும், கட்டுமான வசதியும் இல்லை. இவர் எவ்வாறு வேலையைத் தொடங்குவது ?
ஜீனாப் மோக்காலெட்டின் தோழி கதிஜா பர்ஹாத் தன்னுடைய செலவில் ஒரு லாரியை வாங்கினார்.
மோக்காலெட் தனது வீட்டின் பின்புற தோட்டப் பகுதியை மறுசுழற்சி செய்யவேண்டிய பொருட்களை சேமிக்கும் இடமாக மாற்றினார்.
தங்களது குப்பைகளை யாரவது பெற்றுச்சென்றால் அதற்கு கட்டணத்தை செலுத்த கிராமத்தில் உள்ள 10,000 மக்களும் தயாராக இருப்பார்கள் என்று தோன்றவில்லை. அவர்களுக்கான கட்டணங்களை தன்னார்வலர்கள் செலுத்தினர்.
Image captionமார்ச் 2016ல் குப்பை கிடங்கில் கொட்டுவதற்கு முன்பாக பெய்ரூட் நகரத்தில் தேங்கிய குப்பை
தற்போது 19 ஆண்டுகள் கழித்தும்கூட, இந்த வேலையைத் தொடருவதற்காக, 46 உறுப்பினர்கள் ஆண்டுக்கு, சுமார் 40 அமெரிக்க டாலர்களை செலுத்துகிறார்கள். ''வீடுகளில் மறுசுழற்சி செய்வதுதான் சிறந்தது,'' என்கிறார் 'கால் ஆஃப் எர்த்'(Call of the Earth) என்ற பெயரை இந்த குப்பை மறுசுழற்சி செய்யும் நிறுவனத்திற்கு வழங்கிய மோக்காலெட்.
தொடக்கத்தில் கண்ணாடி, காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே மறுசுழற்சி செய்தனர்.
சமீபத்தில் மின்னணு கழிவுகளை (electronic waste) சேகரிக்கவும் தொடங்கியுள்ளனர்.
தற்போது, தெற்கு லெபனானின் வெப்பம் மற்றும் வறட்சியான தட்பவெப்பநிலையில், கலப்பு உரம் தயாரிப்பதற்கான சிறந்த வழி என்ன என்று அறிய ஒரு ஆராய்ச்சியாளரை பணியில் அமர்த்தியுள்ளனர்.
மூன்று ஆண்டுகள் செய்த பணிக்காக , உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த ஒரே உதவி 300 பிளாஸ்டிக் கூடைகள் மற்றும் குப்பை சேகரிப்பிற்காக ஒரு துண்டு நிலம்.
இதன்மூலம் ஜீனாப் மோக்காலெட் தன்னுடைய வீட்டின் தோட்ட பகுதியை திரும்ப பெற்றார்.
அதே சமயத்தில், பர்ஹாத்தின் லாரி மட்டுமல்லாது மற்றொரு லாரியை வாடகைக்கு எடுத்தனர்.
ஒரு ஆண் லாரி ஓட்டுநராக இருப்பதால், பெண்களிடம் குப்பை சேகரிக்க அவர் அணுகும்போது, அவர் தனியே செல்லாமல், அவருடன் இந்தப் பெண்களும் சென்றனர்.
10 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் ஒரு கிடங்கைக் கட்ட இத்தாலிய தூதரகத்திடமிருந்து, அவர்கள் ஒரு மானியம் பெற்றனர்.
இந்த இடத்தில்தான் தற்போது மோக்காலெட்டை பார்க்க பலரும் வருகிறார்கள். 'கால் ஆஃப் எர்த்'(Call of the Earth) நிறுவனம் எவ்வாறு இயங்குகிறது என்று தெரிந்துகொள்ள பள்ளிக்கூட குழந்தைகள், பிற மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் வருகிறார்கள்.
நகரின் கழிவுகளை கொட்டுவதற்கு ஒரு புதிய இடத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் விரைவாக கேலிக்கூத்தில் முடிந்தன.
Image captionகுப்பைகளை மத்திய தரைகடலில் கொட்டுவதற்காக எடுத்துச் செல்லப்படுவதற்கு முன் எடுத்த படம்
லெபனான் நாட்டின் அனைத்து மதகுழு பிரிவுகளும்- கிறிஸ்துவர்கள், சுன்னி அல்லது ஷியா சமூகத்தினர்- என எல்லோரிடமும் 'என் வீட்டின் பின்பகுதியில் குப்பையை கொட்டாதீர்கள்' என்ற எண்ணம்தான் அதிகமாக இருந்தது.
இதன்பிறகு, அரசாங்கம் குப்பையை ஏற்றுமதி செய்வதாக அறிவித்தது. ஆனால் சில மாதங்களில் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது.
கழிவை எங்காவது கொட்ட வேண்டியிருந்தது. அதனால் அது விமான நிலையத்திற்கு அருகில் கொட்டப்பட்டது.
இது சீகல் பறவைகளை ஈர்த்தது, இது விமானங்களுக்கு அபாயகரமாக மாறியது.
சீ கல் பறவைகளை சுடும் முயற்சிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதன் காரணமாக அவற்றைப் பயமுறுத்தி வெளியேற்ற சத்தமான இசையை எழுப்ப இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
தற்போது நீதிமன்றம் அந்த குப்பை கிடங்கை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அங்கு சீ கல் பறவைகள் தொடர்ந்து வட்டமிட்டபடி உள்ளன.
நீண்ட காலத்தில், அரசாங்கம், குப்பைகளை எரித்து அதில் இருந்து மின்சாரத்தை எடுக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
ஆனால், இது குப்பை சரியாக இனம் பிரிக்கப்படாமல் போகலாம் என்று கூறும் விமர்சகர்கள், பிளாஸ்டிக் மற்றும் விஷ வாயுவை வெளியிடகூடிய பொருட்கள், சுத்தமான ரசாயனம் கலக்காத குப்பையுடன் சேர்ந்து புதைக்கப்படும் என்று கூறுகின்றனர்.
இதன் காரணமாக ஜீனாப் மோக்காலெட்டின் குப்பை சேகரிப்பு மாதிரி பிரபலமாகி வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
இதே போன்ற ஒரு திட்டத்தை, அருகில் உள்ள கஃபாரேமென் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களாவே முன்வந்து தற்போது செயல்படுத்திவருகின்றனர். ஆனால் அந்த திட்டம் தன்னார்வாளர்களின் பணத்தில் அல்லாமல் கிராமவாசிகள் பணத்தில் செயல்படுத்தப்படுகிறது.
''இவர்களைப் பார்க்கும்போது, 20 ஆண்டுகளுக்கு முன் எங்களையே பார்ப்பதுபோல உள்ளது, '' என்றார் ஜீனாப் மோக்காலெட்.
தற்போது கபாரிமென் கிராமத்தில் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் சிறுமிகளாக இருந்தபோது அவர்களுக்கு அரபி இலக்கியம் கற்றுக்கொடுத்தார் ஜீனாப் மோக்காலெட்.
தற்போது சுற்றுச்சுழல் விவகாரங்களில் அவர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டியாக உள்ளார்.
''நீங்கள் பல சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். ஆனால் பொறுமை மற்றும் உறுதிப்பாடு அவசியம்,'' என்று அந்த பெண்களிடம் கூறுகிறார் அவர்.
அவரது முன்னாள் மாணவிகளில் ஒருவரான வாஃபா, ஜீனாப் மோக்காலெட்டின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, ''இவர் எனக்கு ஒரு முன்மாதிரி. எப்போதும் அவர் முயற்சிகளை கைவிடவில்லை,'' என்றார் வாஃபா.
அரப்சலீம் கிராமம் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அதே சமயத்தில் ஜீனாப் மோக்காலெட், அரபி மொழியில் தனது முனைவர் பட்டத்திற்கான படிப்பையும் தொடர்ந்தார். தனது 70வது வயதில் முனைவர் பட்டத்தை அவர் பெற்றார்.
எது உங்களுக்குபெருமை?
''நாம் வாழும் இந்த பூமியை நாம் கவனிக்கவேண்டும் என்பது நமது கடமை என்பதை உலகின் இந்த பகுதியில் இருப்பவர்களின் மனதில் ஏற்படுத்துவது,
அதை அவர்கள் செய்வார்களா இல்லையா என்பது அவர்களை பொறுத்தது, ஆனால் அரசியல்வாதிகள் இதைச் செய்யமாட்டார்கள்'' என்றார் அவர்.
''அரப்சலீம் கிராமத்தில் உள்ளவர்கள் செய்வது போல அனைவரும் செயல்பட்டால், குப்பை பிரச்சனை லெபனானில் இருக்காது,'' என்றார்.
Post a Comment
Post a Comment