ஆயுர் வேத வைத்தியர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு



ஓட்டமாவடி - கொழும்பு பிரதான வீதியிலுள்ள தனியார் கடைத்தொகுதியில் ஆயுள்வேத வைத்தியசாலையோடு இணைந்ததான இல்லத்தில் ஆயுள்வேத வைத்தியர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

இவர் மருதமுனை பரிசாரியாரின் மகனும், நான்கு பிள்ளைகளின் தந்தையுமான ஆயுள்வேத வைத்தியர் எம்.எச்.ஏ.றஷாக் (வயது 55) என்பவரே இன்று (10) அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். 

இறந்தவர் சில காலங்களாக தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பு இல்லாமல் தனது ஆயுள்வேத வைத்தியசாலையில் தங்கியிருந்ததாகவும், பலமுறை தற்கொலைக்கு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

ஆயுள்வேத வைத்தியசாலையோடு இணைந்ததாக உள்ள கடையில் தச்சு பணிக்காக சென்றவர்கள் சீமெந்து குழைக்க சென்ற போது இந்த சம்பவத்தை அறிந்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். 

பின்னர் வாழைச்சேனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று, கொலையா அல்லது தற்கொலையா என்ற ரீதியில் விசாரணைக்காக மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு அறிவித்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.