இந்தியா,இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன



மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இன்று (23) லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி பெறும் வெற்றிகள், தனி நபர் சாதனைகள் உடனடியாக இந்திய கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், சேவாக், யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோரால் பாராட்டப்பட்டு வருகின்றன.
அதுவும் அன்று ஹர்மன்பிரீத் கவுர் ஆஸ்திரேலிய அணியை புரட்டி எடுத்தது அசாத்தியமான ஆட்டமாக வரவேற்பைப் பெற சதம் எடுக்கும் போது எதிர்முனை வீராங்கனை சரியாக ஓடாததால் இவரிடம் திட்டு வாங்கியது, கவுர் குடும்பத்தினரின் பேட்டி, கபில்தேவின் 175 ரன் இன்னிங்ஸுடன் ஒப்பீடு என்று இவர் மூலம் இந்திய மகளிர் அணியே உற்சாக மழையில் நனைந்து கொண்டிருக்கிறது.
அணியின் உற்சாகம் மேலும் வலுவடைய ஒவ்வொரு வீராங்கனைக்கும் பிசிசிஐ ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
மிதாலி ராஜிற்கு இது கடைசி உலகக்கோப்பையாகக் கூட இருக்கலாம் அதனால் அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய தன்னலமற்ற கடமைக்காக அவர் உலகக்கோப்பையுடன் இந்தியா வரவேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது.
முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து தோற்றாலும் அதன் பிறகு 7 போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்காமல் ஆடி வருகிறது. அந்த அணியின் நதாலி ஸ்கிவர் யார்க்கரை வெளுக்கும் திறமையை உலகமே பாராட்டி வருகிறது, சாரா டெய்லரின் அபரிமிதமான பேட்டிங் திறமை டாமி பியுமாண்ட்டின் கம்பீர ஆட்டம், பந்து வீச்சில் ஹீதர் நைட்டின் சீரான வீச்சு ஆகியவை என்று லார்ட்சில் இங்கிலாந்து வெற்றியை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கின்றனர்.
ஆனால் டெர்பியில் கிட்டத்தட்ட உள்நாட்டு சூழல் நிலவியதாக மிதாலி ராஜ் கூறியுள்ள நிலையில் லார்ட்ஸ் பிட்ச் இந்திய அணிக்கு வித்தியாசமாக இருக்கும், பிட்சில் உள்ள சரிவு ஸ்விங் பவுலர்களுக்கு சவால் அளிக்கும், ஸ்பின்னர்களுக்கு அவ்வளவு உதவி இருக்காது. சூழ்நிலைகள் இங்கிலாந்துக்குச் சாதகமாக இருந்தாலும், உயர் அழுத்தப் போட்டி, இந்திய அணியின் தீவிரம் ஆகியவை இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கவே செய்யும்.
இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவின் ஃபார்ம் கவலையளிப்பதாக உள்ளது, 90 மற்றும் 106க்குப் பிறகு 6 இன்னிங்ஸ்களில் சோபிக்கவில்லை. மிதாலி ராஜ் தன் கேப்டன்சியில் இருமுறை உலகக்கோப்பை இறுதிக்கு அணியை இட்டுச் சென்ற கேப்டனாக திகழ்கிறார். இந்த உலகக்கோப்பையில் 392 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய அணி:
பூனம் ராவத், ஸ்மிருதி மந்தனா, மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ஷிகா பாண்டே, சுஷ்மா வர்மா (வி.கீ), ஜுலன் கோஸ்வாமி, ராஜேஸ்வரி கெயக்வாட், பூனம் யாதவ் அல்லது ஏக்தா பிஷ்த்.
இங்கிலாந்து அணி:
லாரன் வின்பீல்ட், டாமி பியுமாண்ட், ஹீதர் நைட், சாரா டெய்லர், நடாலி ஸ்கிவர், பிரான் வில்சன், காதரின் பிரண்ட், ஜெனி கன், லாரா மார்ஷ், ஆன்யா ஷ்ருப்சோலி, அலெக்ஸ் ஹார்ட்லி.