களுவாஞ்சிக்குடியில் கள்ளுத்தவறனைக்கு எதிராக



மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி - எருவில் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கள்ளுத்தவறனை அமைக்கப்படுவதற்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய எருவில் கிராம மக்கள், இன்று காலை இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். 

போதையற்ற நாட்டை உருவாக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்து வரும் நிலையில், இவ்வாறான கள்ளுத்தவறனை போன்ற மது விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்குவது யார் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேள்வியெழுப்பினர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மதுபான உற்பத்திசாலைகள் காணப்படுவதன் காரணமாக எதிர்காலத்தில் எந்த மதுபான விற்பனை நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுவது எவ்வாறு எனவும் அவர்கள் கோரியுள்ளனர். 

எருவில் பகுதியில் கடந்த காலத்தில் மதுபான பாவனை காரணமாக அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதிகளவான குற்றச்செயல்கள் இடம்பெறுவதாகவும் இதனை தடுப்பதற்கு கிராம மட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு கள்ளுத்தவறணைகளை திறப்பது எதிர்காலத்தில் பாரிய சீரழிவுகளை ஏற்படுத்தும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

´போதையற்ற உலகை உருவாக்குவோம்´, ´வேண்டாம் மது, நிராகரிக்கின்றோம் எமது கிராமத்தில் உருவாகும் கள்ளுத்தவறணையை´, ´சமூக சீர்கேட்டை இல்லாது ஒழித்து போதையற்ற சமூகத்தினை உருவாக்குவோம்´, எமது கிராமத்தில் கள்ளுத்தவறணை வேண்டாம் போன்ற பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர். 

இதேவேளை, குறித்த கள்ளுத்தவறணை தொடர்பில் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும், இதனை பொதுமக்கள் எதிர்ப்பதன் காரணமாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்தார். 

இதன்போது குறித்த கள்ளுத்தவறணையின் அனுமதியை இரத்துச் செய்யுமாறு கோரி ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகளுக்கான மகஜர்களும் பிரதேச செயலாளரிடம் வழங்கப்பட்டது.